பெங்களூரு நகர காவல் கட்டுப்பாட்டு அறையில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து வந்த பைரப்பா என்பவருக்கும், வழக்கறிஞர் ரேவதிக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்த இவர்களது வாழ்க்கையில், கடந்த 3 ஆண்டுகளாக பைரப்பாவிற்கு ஏற்பட்ட குடிப்பழக்கம் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் பல பெண்களுடன் இருந்த தவறான தொடர்புகளால் புயல் வீசியது. ரேவதியின் தந்தை ஏற்கனவே 2 கார்கள் மற்றும் பணம் கொடுத்திருந்த நிலையிலும், பைரப்பா மேலும் 50 லட்சம் பணம் மற்றும் சொத்து கேட்டு ரேவதியைத் தொடர்ந்து கொடூரமாக அடித்து வரதட்சணைக் கொடுமை செய்து வந்துள்ளார்.
நிலைமை மோசமடைந்த நிலையில், கடந்த ஜூலை 12 அன்று கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறைத் தீர்க்க வந்த மாமனாரையும், மனைவி ரேவதியையும் பைரப்பா வெட்டுக் கத்தியால் வெட்ட முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரேவதி கெங்கேரி காவல் நிலையத்தில் புகாரளித்தார். ஆனால், அங்கு பைரப்பாவின் நண்பர்கள் பணியில் இருந்ததால் சாதாரண வழக்காக மட்டுமே பதிவு செய்து அவரைக் காப்பாற்ற முயன்றனர். சோர்வடையாத ரேவதி, காவல் துறை உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து முறையிட்டதை அடுத்து, பைரப்பா மீது கொலை முயற்சி, வரதட்சணைக் கொடுமை உள்ளிட்ட ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
கைதான சப்-இன்ஸ்பெக்டர் பைரப்பா, ஏற்கனவே கடந்த ஆண்டு தொழிலதிபர் ஒருவரிடம் 50 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் லோக்ஆயுக்தா போலீசாரால் கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வழக்கு மேல் விசாரணைக்காக பெங்களூரு தெற்கு மாவட்ட தாவரேகெரே காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தென்மேற்கு பிரிவு துணை போலீஸ் கமிஷனர் அனிதா ஹட்டான்னவர் தெரிவித்துள்ளார். சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய போலீஸ் அதிகாரியே மனைவியைக் கத்தியால் வெட்ட முயன்ற இச்சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
