“கூட்டு களவாணி” டூ “கொத்து பரோட்டா”…. அதிமுக எம்எல்ஏக்களை களவாடுகிறார்…. முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த எடப்பாடி…. பரபரக்கும் தமிழக அரசியல்….!

By Nanthini on ஆடி 14, 2026

Spread the love

தமிழக அரசியலில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிற்கும் இடையே தற்போது கடுமையான வார்த்தைப் போர் வெடித்துள்ளது. கரூரில் நடந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய தவெக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய், “அதிமுகவும் திமுகவும் கூட்டு களவாணிகள்; இவர்கள் இருவரும் வெவ்வேறு அல்ல, ஒன்றுதான்” என மிகக் காரசாரமாக விமர்சித்திருந்தார். விஜய்யின் இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, முதல்வர் விஜய்யை நோக்கி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். “அதிமுக சின்னத்தில் வென்று எம்எல்ஏ ஆனவர்களைத் தன் பக்க இழுத்துக் கொண்டு, விஜய் தான் தற்போது உண்மையான களவாணியாகச் செயல்பட்டு வருகிறார்” என்று சாடினார். மேலும், இன்னும் விஜய் ஒரு முழுமையான முதல்வர் அந்தஸ்துக்கே வரவில்லை என்றும், ஆக்கப்பூர்வமாக எதையும் பேசாமல் வெறும் சினிமா ‘பஞ்ச் டயலாக்’ பேசி வருவதாகவும், பிற கட்சி எம்எல்ஏக்களை இரவல் வாங்கித்தான் தவெக ஆட்சியை நடத்தி வருகிறது என்றும் அவர் கடுமையாக விவாரித்தார்.

   

திமுக எதிர்ப்பில் அதிமுக எப்போதும் உறுதியாக இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்திய இபிஎஸ், தவெக கூட்டணி ஆட்சியை ‘இரண்டு கால்கள் கொண்ட நாற்காலி’ என உருவகப்படுத்தி அது தடுமாறிக் கொண்டிருப்பதாகக் கூறினார். அத்துடன், தவெக அரசு அமைந்து 60 நாட்களாகியும் உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்றும், பெண்களுக்காகத் தொடங்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படைத் திட்டத்தில் அந்தப் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் சுட்டிக்காட்டினார். அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு தவெக-விற்குச் சென்றவர்களுக்கு விஜய் ‘அல்வா’ கொடுத்துவிட்டார் என்றும், சுயலாபத்திற்காகவே காங்கிரஸ் தவெக கூட்டணி அரசில் இணைந்துள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

   

எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடித் தாக்குதலுக்கு தவெக-வின் தகவல் தொழில்நுட்ப அணி (IT Wing) உடனடியாகப் பதிலடி கொடுத்துள்ளது. சொந்தக் கட்சியே பீஸ் பீஸாக உடைந்து போய்க் கொண்டிருப்பது தெரியாமல் இபிஎஸ் பேட்டி அளிப்பது வேடிக்கையாக இருக்கிறது என்று அவர்கள் விமர்சித்துள்ளனர். மேலும், திமுகவுடன் சேர்ந்து கூட்டுக்களவாணி ஆட்சி அமைக்க இரவில் இரகசியமாகத் திட்டம் போட்டவர்கள்தான், இப்போது தவெக-வின் மக்கள் ஆட்சியைப் பார்த்து ‘இரவல் ஆட்சி’ என்று பேசுகிறார்கள் என்றும், கொடநாடு கொலை வழக்கு பற்றிப் பேசினாலே நடுங்குபவர்கள் தவெக அரசைப் பற்றிக் குறை கூறுவது ‘குபீர் சிரிப்பு காமெடி’ என்றும் தவெக ஐடி விங் மிகக் காட்டமாகத் தங்களது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளது.