தமிழகத்தில் தவெக அரசு பதவியேற்றுள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தவெகவில் இணைந்து வருகின்றனர். இதில் குதிரை பேரம் நடப்பதாகக் குற்றம்சாட்டி, திமுக சார்பில் ஆளுநர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த வாரம் தவெகவில் இணைந்த கரூர் எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்களை தவெகவில் இணையுமாறு அணுகியதாக வெளிப்படையாகக் கூறியதை முக்கிய ஆதாரமாக திமுக சுட்டிக்காட்டியுள்ளது.
செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, குதிரை பேரத்தில் முதலமைச்சர் விஜய் ஈடுபட்டதற்கான ஆதாரங்களுடன் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நீதிமன்றத்தை நாடத் தயங்கமாட்டோம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், கரூர் வழக்கை கண்காணிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் சிபிஐ-யிடமும் இது தொடர்பாக மனு அளிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
முதலமைச்சர் விஜய் உண்மைக்கு மாறாகவும், கொளத்தூரில் கீழ்த்தரமாகவும் பேசி வருவதாகச் சாடிய ஆர்.எஸ். பாரதி, இதற்கு எடப்பாடி பழனிச்சாமி தகுந்த பதில் அளித்துள்ளதை நினைவுகூர்ந்தார். மேலும், அரசியல் விமர்சனங்களால் முக்கியப் பிரச்சினைகள் திசை திரும்பிவிடுவதால், இனிமேல் தவெக கூட்டணியில் இருந்த கட்சித் தலைவர்கள் குறித்துப் பேசப்போவதில்லை என்றும், கடந்த தேர்தலின் போது செத்த பாம்பை அடித்துவிட்டு கருநாகத்தை தப்பவிட்ட தவறை மீண்டும் செய்ய மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.
