தமிழக அரசியலில் அண்ணாமலையின் திடீர் அரசியல் திருப்பங்கள் தற்போதும் பேசுபொருளாக மாறியுள்ளன. அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் முதல் மாநாடு கோயம்புத்தூரில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் திரண்டு வந்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். அண்ணாமலை முன்பு பாஜகவில் இருந்தபோது நடைபெற்ற கூட்டங்களை விட, தற்போது கட்சி சாராத இந்த அமைப்பின் மாநாட்டிற்கு மக்களின் பேராதரவு கிடைத்திருப்பது அரசியல் வட்டாரங்களில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாபெரும் ஆதரவிற்கு அண்ணாமலையின் அண்மைக்கால அரசியல் நிலைப்பாடே முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் கரூர் மாவட்டத்தில் உள்ள புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி கோயில் உள்ளிட்ட நான்கு கோயில்களுக்குச் சொந்தமான 3,084 ஏக்கர் நிலங்கள் தொடர்பான அரசாணையை தவெக அரசு வெளியிட்டிருந்தது. கடந்த 1963-ஆம் ஆண்டு சட்ட சிக்கல்களால் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் முடங்கிக் கிடந்த இந்த நிலங்களின் தடையை நீக்கி, 3,390 பட்டாதாரர்களுக்குப் பயன்படும் வகையில் தவெக அரசு இந்த அரசாணையை பிறப்பித்திருந்தது.
தமிழக அரசின் இந்த அரசாணைக்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுகுறித்து பாஜாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கவுன்சிலர் உமா ஆனந்தன் ஆகியோர், அரசியல் ஆதாயத்திற்காக சுமார் 25,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலங்கள் தாராளமயமாக்கப் படுவதாகக் குற்றம் சாட்டினர். ஆனால், இங்குதான் அண்ணாமலை ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தினார். பாஜகவின் அதிகாரப்பூர்வ நிலைக்கு மாறாக, தவெக அரசின் இந்த அரசாணைக்கு அண்ணாமலை 100% தனது முழு ஆதரவை வழங்கினார்.
காலம் காலமாக கோயில் நிலங்களை நம்பி விவசாயம் செய்து வரும் எளிய மக்களின் வாழ்வாதாரத்தை அண்ணாமலை ஆதரித்தது கரூர் பகுதி மக்களிடையே அவருக்குப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை போன்ற டெல்டா மாவட்டங்களில் தலைமுறை தலைமுறையாக உழைத்தும் நில உரிமை இல்லாமல் தவிக்கும் ஏழை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அண்ணாமலையின் இந்த நகர்வு அமைந்திருந்தது. “உழைப்பவர்களுக்கே நிலம் சொந்தம்” என்ற கோரிக்கைக்கு ஆதரவாக அவர் நின்றது, அவரை பாஜாகவின் கொள்கையில் இருந்து முற்றிலும் வேறுபடுத்திக் காட்டியுள்ளது.
பாஜகவினர் அண்ணாமலையின் இந்த முடிவைக் கடுமையாக விமர்சித்தாலும், கோவை மாநாட்டில் திரண்ட மக்கள் கூட்டம் அண்ணாமலையின் தற்போதைய தனித்துவமான அரசியலுக்குக் கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இந்த அதிரடி நகர்வின் மூலம், தமிழக முதல்வர் விஜய்க்கு நேரடிப் போட்டியாளராகவும், ஒரு வலுவான மாற்று சக்தியாகவும் அண்ணாமலை மிகக் குறுகிய காலத்திலேயே உருவெடுத்து விடுவார் என்று அரசியல் விமர்சகர்கள் தற்போது கணிக்கத் தொடங்கியுள்ளனர்.
