கடந்த ஜூலை 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், பல்வேறு வழக்குகளின் கீழ் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படையினரால் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி (DGP) அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தஞ்சாவூரில் பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், திண்டுக்கல் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் வீதம் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த அதிரடிப்படையினருக்குக் கிடைத்த 371 புகார்கள் மீது சம்பவ இடத்திற்கே நேரில் சென்று உடனடியாகத் தீர்வு காணப்பட்டதோடு, தீவிரக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
