“என்னை 5 வருஷம் ஜெயில்ல போட்டாலும்”…. ஜாமீனில் வந்த உடனே விஜய்க்கு அனிதா ராதாகிருஷ்ணன் விடுத்த பகிரங்க சவால்….!

By Nanthini on ஆடி 12, 2026

Spread the love

திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவருமான விஜய்யை மீண்டும் கடுமையாக விமர்சித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கடந்த வாரம் முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர், தற்போது மீண்டும் திமுக பொதுக்கூட்டத்தில் விஜய்க்கு எதிராகச் சீறியுள்ளார். மாலை 6 மணிக்கு வீட்டுக்குச் சென்றால், காலை 10 மணிக்குத்தான் எழும் பழக்கம் கொண்ட விஜய்க்கு, தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது என்று அவர் சாடியுள்ளார்.

அரசியல் என்பது சினிமாவில் நடிப்பது போன்றது அல்ல என்று சுட்டிக்காட்டிய அனிதா ராதாகிருஷ்ணன், மக்களுக்கு எந்தவொரு நன்மையும் செய்யாமல் வெறும் சினிமாப் புகழை மட்டும் வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றிவிடலாம் என்று சிலர் நினைப்பதாகக் குற்றம்சாட்டினார். மேலும், தனது கைதின் பின்னணியில் ஆளும் தரப்பின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், “நான் மேடையில் பேசியதற்காக என் மீது புகார் அளித்து, ஒரு மாதம் சிறையில் வைக்கத் திட்டமிட்டார்கள். ஒரு மாதம் அல்ல, என்னை 5 ஆண்டுகள் சிறையில் அடைத்தாலும் திமுகவை எந்தவொரு கொம்பனாலும் அசைக்க முடியாது” என்று ஆவேசமாகப் பேசினார்.

   

வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்கள் குறித்தும் தவெக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் பகிரங்க சவால் விடுத்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் தமிழ்நாட்டில் ஒரு வார்டில் கூட வெல்ல முடியாது என்றும், அதேபோல் தவெக எங்கும் வென்றுவிட முடியாது என்றும் அவர் கூறினார். தேர்தல் களத்தில் அனைத்து இடங்களிலும் திமுகவே வென்றது என்ற புதிய வரலாற்றை உருவாக்க வேண்டிய இடத்தில் தற்போதைய தொண்டர்கள் இருக்கிறார்கள் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

   

ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ எழுப்பிய 50 கோடி ரூபாய் புகார் குறித்தும், இடைத்தேர்தல் வியூகங்கள் குறித்தும் தனது உரையில் விளக்கமளித்த அனிதா ராதாகிருஷ்ணன், திமுகவின் பலத்தை யாராலும் குறைத்து மதிப்பிட முடியாது என்றார். சிறைவாசத்திற்குப் பிறகும் தவெக தலைவர் விஜய் மீதான அவரது விமர்சனக் கணை குறையாதது, தமிழக அரசியல் களத்தில் தவெக மற்றும் திமுக இடையேயான மோதல் போக்கை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.