சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை கேலி செய்து பேசிய விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், முதல்வர் விஜய் மீண்டும் அவரை விமர்சித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்கள் மத்தியில் பேசிய முதல்வர் விஜய், எதிர்க்கட்சியினரின் வெளிநடப்பு மற்றும் விமர்சனங்களைக் கிண்டல் செய்யும் தொனியில் பேசினார். தனது பேச்சுக்குக் கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையிலும், முதல்வர் விஜய் தனது பாணியை மாற்றிக்கொள்ளாமல் மீண்டும் ஆவேசமாகவும் நையாண்டியாகவும் பேசியுள்ளது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், “நான் பேசவில்லை என்றால் ‘வாயைத் திறங்க சி.எம்’ எனப் பேட்ஜ் குத்திக்கொண்டு வருகிறார்கள்; ஆனால் நான் பேசத் தொடங்கினால் பயந்து எழுந்து ஓடுகிறார்கள். இனி நான் பேசுவதற்கு முன்பு பேரவைத் தலைவரிடம் சொல்லி எல்லா கதவுகளையும் இழுத்து மூடச் சொல்ல வேண்டும் போலிருக்கிறது. நான் வெறும் 5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டுவிட்டார்கள். இதற்கு மேல் நான் பேசினால் மொத்தமாக முடிந்துவிடும்” என முன்னாள் முதல்வர் ஸ்டாலினைக் கொளத்தூர் தொகுதியை மையப்படுத்தி மறைமுகமாக மீண்டும் கேலி செய்துள்ளார். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியையும் ‘வேட்டைக்காரன் வர்றான் பாரு’ எனத் தனது பாணியில் அவர் விமர்சித்துப் பேசினார்.
முன்னதாக, சட்டசபையில் “அப்பாவைக் காணோம்” என ஸ்டாலினை விஜய் கிண்டல் செய்ததற்கு விசிக தலைவர் திருமாவளவன், சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம், சிபிஐ மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களே கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். முதல்வர் பதவிக்கான மாண்பைக் குறைக்கும் வகையில் பேசக் கூடாது என்றும், நாகரிக அரசியலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். இருப்பினும், தன் சொந்தக் கூட்டணியில் இருக்கும் தலைவர்களின் அறிவுரைகளையும் கண்டனங்களையும் சற்றும் பொருட்படுத்தாமல், முதல்வர் விஜய் மீண்டும் ஸ்டாலினைக் கேலி செய்திருப்பது தற்போதைய அரசியல் சூழலில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
