தணிக்கை வாரியத்துடனான 7 மாத கால போராட்டத்திற்குப் பிறகு, எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. விஜய் திரைப்பயணத்திலேயே ஒரு படம் ‘A’ சான்றிதழ் பெறுவது இதுவே முதல்முறையாகும். திரையரங்குகளில் படம் வெளியாவதற்கு முன்பாக 12 முக்கிய திருத்தங்களை மேற்கொள்ள சென்சார் குழு உத்தரவிட்டுள்ளது. இதில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் படம் இடம்பெறும் புத்தக அட்டை மற்றும் “அம்பேத்கர் தொடங்கி TVK சட்டம்” என்ற வசனம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும், ஆடியோ மற்றும் வீடியோவில் “டிவிகே” என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், தேசியக் கொடி கீழே விழும் காட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சின்னம் மரியாதையற்ற முறையில் உருட்டிவிடப்படும் காட்சி ஆகியவற்றை முற்றிலும் நீக்க தணிக்கை வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இவற்றுடன் படத்தில் இடம்பெற்ற சில குறிப்பிட்ட வார்த்தைகள் மற்றும் சர்ச்சைக்குரிய வசனங்களுக்கும் சென்சார் குழு கத்திரி போட்டுள்ளது. ‘பாகவதான்’, ‘ரங்கநாதர்’ ஆகிய சொற்களும், ‘தே பை’, ‘ஒ’ போன்ற கெட்ட வார்த்தைகளும் ம்யூட் செய்யப்பட்டுள்ளன. ‘ஆபரேஷன் மெலூஹா’ காட்சியில் வரும் ‘ஓம்’ என்ற சொல்லும், சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டதைக் குறிப்பிடும் உரையாடலும் நீக்கப்பட்டுள்ளன. “பொன்னோடா… குடுத்து வச்சிருக்கு…”, “இந்தியாவை என் காலில் விழ வைக்கிறேன்” ஆகிய வசனங்களும், ‘சிலுவையில’ என்ற வார்த்தையும் ம்யூட் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், குழந்தையை எரிக்கும் கொடூரமான காட்சி நீக்கப்பட்டுள்ளதுடன், படம் முழுவதும் வரும் ‘ஷீலா ராணி’ என்ற பெயரையும் மாற்றுமாறு தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த 12 நிபந்தனைகளின்படி, மொத்தம் 20 வினாடிகள் நீக்கத்திற்கும், 10 வினாடிகள் மாற்றியமைப்பதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், படத்தின் மொத்த நீளமான 183 நிமிடங்கள் 11 வினாடிகளில் எந்த மாற்றமும் ஏற்படாது எனத் தெரிகிறது. கேவிஎன் நிறுவனம் தயாரிப்பில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த ஆண்டின் மிக எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமான ‘ஜனநாயகன்’, வரும் ஜூலை 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகலாம் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது.
