ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சிக்குச் சென்ற சரக்கு விமானம் ஒன்று அரபிக்கடலில் விழுந்து நொறுங்கியது. பாகிஸ்தானின் ‘கே2 ஏர்வேஸ்’ (K2 Airways) நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த போயிங் 737 ரக விமானம், 5 பேருடன் புறப்பட்ட நிலையில் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து மாயமானது. தற்போது அரபிக்கடலில் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில், விமானத்தின் சிதைந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அதில் பயணித்த 5 பேரின் கதி என்னவென்று இதுவரை தெரியவில்லை.
இந்த விபத்திற்கு விமானத்தில் ஏற்பட்ட ‘நேவிகேஷனல் சிஸ்டம்’ (Navigational System) எனப்படும் வழிகாட்டு அமைப்பின் தொழில்நுட்பக் கோளாறே முக்கியக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. அரபிக்கடலின் மேலே பறந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட இந்தக் கோளாறு குறித்து, விமானிகள் உடனடியாக கராச்சி விமானக் கட்டுப்பாட்டு மையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, கட்டுப்பாட்டு அறையின் உதவியுடன் விமானம் கராச்சியை நெருங்கியது. ஆனால், இரவு 9.21 மணியளவில் திடீரெனத் தனது பயணத் திசையை மாற்றிய விமானம், வேகமாக உயரத்தைக் குறைத்து, கராச்சியில் இருந்து சுமார் 287 கிலோமீட்டர் மேற்கே ரேடார் தொடர்பை இழந்து கடலில் விழுந்தது.
இந்த விபத்து குறித்த தகவல்களை பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து ஆணையம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட உடனேயே பாகிஸ்தான் கடற்படை, மீட்புப் படையினர் மற்றும் விமான ஆணையம் இணைந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டன. தற்போது கடலில் இருந்து விமானத்தின் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டு, விபத்து உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், விமானத்தில் பயணித்த அந்த 5 பேரைத் தேடும் பணி தொடர்ந்து முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
