தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில், கடந்த 7 நாள்களாக மாநிலம் முழுவதும் காவல்துறை அதிரடியாக நடத்திய ‘கிளீன் ஆபரேஷன்’ (Clean Operation) வேட்டையில் மொத்தம் 3,334 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தீவிர நடவடிக்கையின் போது, சுமார் 24,025 ரவுடிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையின் அடிப்படையில், நீண்ட நாள்களாக தலைமறைவாக இருந்த 949 பேர் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டனர்; மேலும், நீதிமன்றத்தால் பிடியாணை (Warrant) பிறப்பிக்கப்பட்டும் போலீசாரின் கண்ணில் படாமல் தலைமறைவாகத் திரிந்த 2,385 குற்றவாளிகளும் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை குற்றச் செயல்களில் ஈடுபடுவோரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
