தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக கூட்டணி உடைந்து, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளன. இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளையும் இணைத்து விசிக தலைவர் திருமாவளவன் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். அவரின் இத்தகைய மாறுபட்ட கருத்துக்களை விமர்சிக்கும் வகையில், “திருமாவளவனின் பேச்சுக்கு அவருக்கு நோபல் பரிசே வழங்கலாம்” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அண்மையில் கிண்டலாகக் குறிப்பிட்டிருந்தார்.
வைகோவின் இந்த விமர்சனத்திற்கு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் மிகக் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார். “என்னுடைய கருத்துகளுக்காக எனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்ற வைகோவின் பரிந்துரைக்கு நன்றி; உண்மையில் நோபல் பரிசு கிடைத்தால் அவருக்கு நான் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிப்பேன்” என்று அவர் கிண்டலாகக் கூறினார். மேலும், தங்களின் சுயலாபத்திற்காகவோ அல்லது விசிகவில் இருந்து ஒருவர் திமுகவில் இணைந்துவிட்டார் என்ற கோபத்திலோ தான் பேசவில்லை என்றும், தனது பார்வையில் எந்தக் குழப்பமும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்து தனது அரசியல் நிலைப்பாடு குறித்துப் பேசிய திருமாவளவன், தமிழ்நாட்டை அல்லது விசிகவை மட்டும் மனதில் வைத்து தான் பேசவில்லை என்றும், தேசிய அளவில் பாஜகவின் மதவாத மற்றும் சதி அரசியலை முறியடிப்பதே தனது நோக்கம் என்றும் குறிப்பிட்டார். கொள்கை ரீதியாக பாஜகவை எதிர்க்கும் திமுக மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளும் தேசிய அளவில் ஓரணியில் திரள வேண்டும் என்பதே தனது பார்வை என்றார். இந்தத் தூரநோக்கு பார்வையைத் தமிழக அரசியல்வாதிகளாலும், ஊடகவியலாளர்களாலும் புரிந்துகொள்ள முடியாது என்றும், எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் அவர் அரசியல் களம் அதிரப் பேசியுள்ளார்.
