இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் சந்தித்த படுதோல்வி, ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே இந்திய அணி 100 ரன்களுக்கும் அதிகமான வித்தியாசத்தில் தோற்றதே இல்லை என்ற நிலையில், இந்த தோல்வி மிகப்பெரிய அவமானமாகப் பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணி 201 ரன்கள் குவித்த அதே பிட்சில், இந்திய அணி வெறும் 76 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி சுருண்டது, அணியின் மோசமான பேட்டிங் கட்டமைப்பையே தோலுரித்துக் காட்டியுள்ளது.
அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகிய தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாட முயன்று ஆட்டமிழந்த பின், வந்த பேட்ஸ்மேன்கள் எவரும் பொறுப்புடன் விளையாடவில்லை. ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் தனது பழைய தவறுகளையே செய்து விக்கெட்டை பறிகொடுக்க, இஷான் கிஷன் தனது வழக்கமான நிலைத்தன்மையற்ற ஆட்டத்தைத் தொடர்ந்து வருகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள திலக் வர்மா, ஸ்பின்னர்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திணறி வருவது கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
திலக் வர்மாவின் பேட்டிங் ஸ்டைலுக்கு அவர் ‘டாப் 4’ வரிசையில் களமிறங்குவதே சரியாக இருக்கும். ஆனால், இந்திய நிர்வாகமோ அவரை 5 அல்லது 6வது வரிசையில் களம் இறக்கி சொதப்பி வருகிறது. அவர் துணைக் கேப்டனாக இருப்பதால், மோசமான ஃபார்மில் இருந்தாலும் அவரை அணியில் இருந்து நீக்க முடியாமல் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தவித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் திலக் வர்மாவை விடவும் அணிக்கு அதிக பங்களிப்பை வழங்கியுள்ள நிலையில், சஞ்சு சாம்சனை விடுத்து திலக் வர்மாவிற்கு எதன் அடிப்படையில் துணைக் கேப்டன் பதவி தரப்பட்டது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்திய அணியின் இந்த பேட்டிங் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டுமெனில், திலக் வர்மாவின் 5வது வரிசையில் இஷான் கிஷனை இறக்கிவிட்டு, சஞ்சு சாம்சனை 3வது வரிசையில் களம் இறக்க வேண்டும் என்பதே கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. அதை விடுத்து, சஞ்சு சாம்சனை அணியில் இருந்து வெளியே உட்கார வைத்துவிட்டு, ஃபார்ம் அவுட்டில் இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் திலக் வர்மா ஆகிய இருவரையும் ஒரே அணியில் விளையாட வைப்பது இந்திய நிர்வாகமே தனக்குத்தானே செய்து கொள்ளும் தற்கொலை முயற்சிக்கு சமம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
