அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குதிரை பேர அரசியலில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்காமல், அக்கட்சியின் குறிப்பிட்ட சில எம்.எல்.ஏ.க்களை மட்டும் விஜய் தேடிச் சென்று சந்திப்பது ‘ஆடு பகை, குட்டி உறவு’ என்ற பழமொழியையே நினைவூட்டுவதாக அவர் சாடியுள்ளார்.
ஏற்கனவே 6 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து விஜய் இத்தகைய அபத்தமான அரசியல் ஆட்டத்தைத் தொடங்கியுள்ளதாகவும், மேலும் 12 பேர் வரை இந்த வலையில் வீழ்த்தப்படலாம் என செய்திகள் வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அ.தி.மு.க.வை தொடர்ந்து சீண்டிக் கொண்டே இருந்தால் காலம் இப்படியே நீடிக்காது என்றும், அரசியல் சூழல் மாறும்போது விஜய் கடுமையான பின்னடைவைச் சந்திக்க நேரிடும் என்றும் உதயகுமார் எச்சரித்துள்ளார்.
