சாலை விபத்துகளில் சிக்குபவர்களைக் கட்சிப் பாகுபாடின்றி மீட்டு, அவர்களுக்குத் தகுந்த முதலுதவி அளித்து மருத்துவமனையில் அனுமதிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் முன்னாள் அமைச்சரும் தற்போதைய விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான சி.விஜயபாஸ்கர். சமீபத்தில் விபத்தில் சிக்கிய காவலர் ஒருவரை மீட்டு அவர் மருத்துவமனையில் அனுமதித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோன்று கடந்த காலங்களில் திமுக பிரமுகரின் தந்தை மற்றும் தனியார் தொழிற்சாலை பணியாளர்கள் விபத்தில் சிக்கியபோதும், அந்த வழியாகச் சென்ற விஜயபாஸ்கர் உடனடியாகத் களமிறங்கி அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். அரசியல் அடையாளங்களைத் தாண்டி, ஆபத்தான கட்டத்தில் மனிதநேயத்தோடு அவர் செய்யும் இந்த உதவிகள் மக்கள் மத்தியில் பரவலான பாராட்டைப் பெற்று வருகின்றன.
இருப்பினும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் செல்லும் இடங்களிலெல்லாம் தொடர்ந்து விபத்துச் செய்திகள் வெளியாவது எப்படி என்று சில நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி விமர்சித்து வருகின்றனர். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள அவரது ஆதரவாளர்கள், அடிப்படையில் சி.விஜயபாஸ்கர் ஒரு மருத்துவர் என்பதால் விபத்துகளைக் கண்டு கடந்து போகாமல், தன் கடமையை உணர்ந்து உடனடியாக முதலுதவி செய்கிறார் என்று விளக்கம் அளித்துள்ளனர். மருத்துவப் பின்புலம் கொண்ட ஒரு மக்கள் பிரதிநிதி, விபத்தில் சிக்கியவர்களின் உயிரைக் காக்க முன்னிற்பதில் கேலி செய்வதற்கு எதுவுமில்லை என்றும், அவரது மனிதநேயமே இதற்குக் காரணம் என்றும் அவர்கள் ஆதரவுக் குரல் கொடுத்துள்ளனர்.
மக்களோடு எளிமையாகப் பழகக்கூடியவர் என்ற பெயரைப் பெற்றுள்ள சி.விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மற்றும் விராலிமலை தொகுதிகளில் தொடர்ந்து ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக வென்றவர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக 10 ஆண்டுகள் அமைச்சராகப் பதவி வகித்த இவர், சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ இணைந்துள்ளார். வரும் இடைத்தேர்தலில் அவர் மீண்டும் விராலிமலை தொகுதியிலேயே போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், அரசியல் மாற்றங்களுக்கு மத்தியிலும் அவரது இந்த மருத்துவச் சேவைகளும் சமூக வலைதள விவாதங்களும் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளன.
