ஈரோடு மாவட்டம், சக்தி சாலை செங்குந்தர் நகர் 6-வது வீதியைச் சேர்ந்த 50 வயதுடைய கண்ணன் என்பவர், அங்குள்ள காலண்டர் மில் ஒன்றில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். குடிப்பழக்கம் உடைய இவர், கடந்த சனிக்கிழமை இரவு வழக்கம் போல மது அருந்திவிட்டு மில்லிற்கு உறங்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், கண்ணனை வழிமறித்துக் கட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் தலை மற்றும் உடலின் பல இடங்களில் பலத்த காயமடைந்து, ரத்த வெள்ளத்தில் சரிந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவர் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கண்ணனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் நிபுணர்கள் அங்கு சோதனை நடத்தி, கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கட்டை உள்ளிட்ட முக்கிய சான்றுகளைச் சேகரித்துள்ளனர். இக்கொலை முன்விரோதம் காரணமாக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், தப்பியோடிய மர்ம நபரைப் பிடிப்பதற்காக அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வரும் போலீசார், குற்றவாளியைத் தேடத் தனிப்படை அமைத்துத் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
