அரசின் நலத்திட்டங்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு ஜாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் போன்ற பல்வேறு ஆவணங்கள் இன்றியமையாதவை ஆகும். தற்போது இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கப்படும் இந்த சான்றிதழ்கள், கிராம நிர்வாக அலுவலர் , வருவாய் ஆய்வாளர் மற்றும் தாசில்தார் என மூன்றடுக்கு ஆய்வுகளுக்குப் பிறகே மக்களுக்கு வழங்கப்படுகின்றன. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய சூழலுக்கு ஏற்ப வகுக்கப்பட்ட இந்த நீண்ட நடைமுறையால், சான்றிதழ்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு, பொதுமக்களின் அடுத்தகட்ட பணிகள் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது.
தற்போதைய நவீன சூழலுக்கு ஏற்ப, இந்த நிர்வாக நடைமுறையை எளிமைப்படுத்த வருவாய் துறை தற்போது தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் முதற்கட்டமாக, எஸ்.சி./எஸ்.டி. அல்லாத பிற ஜாதி சான்றிதழ்கள், இருப்பிடச் சான்று, வருவாய் சான்று, முதல் பட்டதாரி சான்று மற்றும் முதல் திருமணச் சான்று போன்றவற்றில் வருவாய் ஆய்வாளரின் தலையீட்டைத் தவிர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, கிராம நிர்வாக அலுவலரின் ஆய்வுக்குப் பின், விண்ணப்பங்கள் நேரடியாக தலைமையிடத்து துணை தாசில்தாருக்குச் செல்லும் வகையில் வழிமுறைகள் ஆராயப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள ‘தானியங்கி பட்டா மாறுதல்’ திட்டத்தைப் போல, இந்த சான்றிதழ் வழங்கும் பணிகளையும் எளிமைப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். எந்தெந்த சான்றிதழ்களுக்கு வருவாய் ஆய்வாளரின் ஆய்வு அவசியம் தேவை, எவற்றுக்குத் தேவையில்லை என்பதை அரசு தற்போது வரையறை செய்து வருகிறது. இந்த புதிய மாற்றத்தின் மூலம், வருவாய் ஆய்வாளர்களின் பணிச்சுமை கணிசமாகக் குறைவதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு எவ்வித காலதாமதமும் இன்றி மிக விரைவாகச் சான்றிதழ்கள் கிடைக்க வழிவகை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
