ஆந்திர மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணா மாவட்டம், கூடூர் மண்டலம், அனந்தாயிபேட்டை கிராமத்தைச் சேர்ந்த ரஜினி (வயது 60), அவரது மகள் கவுரி (40) மற்றும் அவரது மருமகள் ஆகிய மூன்று பேரும் அவர்களது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கூடூர் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த மூன்று பெண்களின் உடல்களையும் மீட்ட போலீசார், உடற்கூறாய்வு செய்வதற்காக மசூலிப்பட்டினம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பப் பிரச்சினை காரணமாக அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது யாரேனும் அவர்களை கொலை செய்தார்களா என்ற இருவேறு கோணங்களில் போலீசார் தங்களது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
