தலைநகர் டெல்லியின் திலங்பூர் கோடா கிராமத்தைச் சேர்ந்த வினய் (வயது 28) என்ற இளைஞருக்கும், நிஷா என்ற பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு இடையே குடும்பப் பிரச்சினைகள் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று இவர்களுக்குள் மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் விபரீதமாக மாற, ஆத்திரமடைந்த வினய் தனது மனைவி நிஷாவைத் தாக்கியதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த நிஷா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனைவியின் மரணத்தால் அதிர்ச்சியடைந்த வினய், சட்ட நடவடிக்கைக்குப் பயந்து அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார்.
அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நிஷாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கொலை வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள வினய்யைத் தீவிரமாகத் தேடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
