உலக நாடுகளுக்கு ஈரான் வச்ச செக்… இனிமேல் கப்பல்களுக்கு “ரூட் டாக்ஸ்”…. ஆட்டம் காணும் உலகப் பொருளாதாரம்… சீக்ரெட் லிஸ்ட்டில் இந்தியா….!

By Nanthini on ஆடி 5, 2026

Spread the love

உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தக பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களிடம், பாதுகாப்பு மற்றும் வழிநடத்தல் சேவைகளுக்காக இனி கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக அமைதி மாநாட்டில் பேசிய சீனாவுக்கான ஈரான் தூதர் அப்துல்ரேசா ரஹ்மானி பஸ்லி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியின் ஒரு பகுதி ஈரானின் கடல் எல்லைக்குள் வருவதால், அங்கு வழங்கப்படும் சேவைகளுக்காக கட்டணம் வசூலிப்பது இயல்பான ஒன்றுதான் என்றும், இதனை சாதாரண சுங்கக் கட்டணமாகக் கருதக் கூடாது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதலுக்குப் பிந்தைய தற்காலிக ஒப்பந்தத்தின் அடிப்படையில், கடந்த 60 நாட்களாக வணிகக் கப்பல்களுக்கு எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படாமல் இருந்தது. இந்த காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையில், ஈரான் தனது புதிய சேவை கட்டண முறையை வெளிப்படையாக அறிவித்துள்ளது. கப்பல்கள் பாதுகாப்பாக பயணிப்பதை உறுதி செய்தல், அவற்றின் இயக்கத்தைக் கண்காணித்தல் மற்றும் கடல் போக்குவரத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை நிர்வகித்தல் போன்ற காரணங்களுக்காகவே இக்கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த கடல் வழித்தட போக்குவரத்தை முறையாக நிர்வகிப்பது குறித்து ஓமனுடன் இணைந்து ஈரான் ஆலோசித்து வருகிறது.

   

இந்த அறிவிப்பில் மிக முக்கிய அம்சமாக, சமீபத்திய போர் மற்றும் மோதல் காலங்களில் ஈரானுக்கு ஆதரவாகவும் நட்பாகவும் செயல்பட்ட நாடுகளுக்கு இந்த சேவை கட்டணத்தில் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும் என்று ஈரான் தூதர் தெரிவித்துள்ளார். உலக நாடுகளுக்கு சலுகைகளை வாரி வழங்க திட்டமிட்டுள்ள ஈரான், எந்தெந்த நாடுகளுக்கு இந்த சலுகைகள் பொருந்தும் என்பது குறித்த விரிவான பட்டியலை தற்போது வரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இது சர்வதேச அளவில் ஈரான் தனது நட்பு நாடுகளை வலுப்படுத்தவும், எதிரி நாடுகளுக்கு நெருக்கடி கொடுக்கவும் எடுக்கும் ராஜதந்திர நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

   

உலகின் மொத்த கச்சா எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் சுமார் 20 சதவீதம் இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுவதால், ஈரானின் இந்த புதிய கட்டண முறை சர்வதேச எண்ணெய் சந்தையிலும் உலகப் பொருளாதாரத்திலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. சமீபத்திய மேற்கு ஆசிய மோதலின் போது இங்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததும், பின்னர் அமெரிக்கா-ஈரான் தற்காலிக போர் நிறுத்தத்தால் விலை சரிந்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிரந்தர அமைதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் சூழலில், அதன் முடிவைப் பொறுத்தே இந்த புதிய கட்டண முறை எப்போது அமலுக்கு வரும் என்பது இறுதி செய்யப்படும் என்று சர்வதேச நிபுணர்கள் கருதுகின்றனர்.