மதுரையில் அரசு அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம், வைகை ஆறு குறித்த சர்ச்சை பேச்சு, அதனைத் தொடர்ந்து மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க ஆளுநர் மாளிகையில் தனிப்பிரிவு எனத் தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேக்கரின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. சவுராஷ்டிரா கல்லூரி விழாவிற்காக மதுரை வந்த ஆளுநர், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளை அழைத்து அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தியதுடன், வைகை ஆற்றை சீரமைக்காவிட்டால் ஆளுநர் மாளிகையே நேரடியாகக் களமிறங்கும் என்றும் எச்சரித்தார். மேலும், மக்கள் குறைகளைக் கேட்கத் தனிப்பிரிவு தொடங்கப்படும் என்றும், தமிழக அரசுடன் இணைந்து செயல்படப் போவதாகவும் அவர் அறிவித்திருப்பது, “தமிழகத்தில் நடப்பது மக்கள் ஆட்சியா அல்லது ஆளுநர் ஆட்சியா?” என்ற விவாதத்தை பொதுவெளியில் உருவாக்கியுள்ளது.
ஆளுநரின் இந்த தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு திமுக, விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு இருக்கும்போது, அதிகாரிகளை அழைத்து ஆய்வு நடத்த ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று திமுக சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளதுடன், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தவெக அமைச்சர் நிர்மல்குமாரும் ஆளுநரின் செயலைக் கண்டித்துள்ளார். கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ‘ஆட்டுக்கு தாடி எதுக்கு, நாட்டுக்கு ஆளுநர் எதுக்கு’ எனத் தலைவர்கள் உடனுக்குடன் எதிர்வினையாற்றியதை சுட்டிக்காட்டும் அரசியல் விமர்சகர்கள், தற்போதைய சூழல் மிகவும் கவலைக்குரியதாக இருப்பதாகக் கருதுகின்றனர்.
இருப்பினும், இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் இன்னும் மௌனம் காப்பது அவரது கூட்டணிக் கட்சிகளிடையே பெரும் சலசலப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஆளுநர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற ஒற்றை நோக்கத்திற்காகவே தவெக-விற்கு காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயுஎம்எல் போன்ற கட்சிகள் ஆதரவு அளித்தன. “ஆளுநரின் அத்துமீறல்களை நாங்களே எவ்வளவு நாட்களுக்குத்தான் எதிர்ப்பது, இந்த விஷயத்தில் முதலமைச்சர் விஜய் உடனடியாகத் தலையிட்டு தனது கறாரான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்” என்று கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தற்போது கொந்தளித்து வருகின்றனர்.
