“அசத்திட்டீங்க…!” சி. விஜயபாஸ்கருக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் பாராட்டு… மீட்டிங்கின் ‘லீக்’ ஆன ரகசியங்கள்…!!

By Swetha on ஆடி 4, 2026

Spread the love

அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசினர். மாமல்லபுரத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் பிரமாண்டமாக நடைபெற்ற இணைப்பு விழாவைக் குறிப்பிட்டு, விஜய் தன்னைப்பார்த்து அசத்திட்டீங்க என்று பாராட்டியதாக சி. விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும், சாமானிய மக்களின் அன்பைப் பெற்றுள்ள இந்தத் தலைமைப்பண்பின் கீழ், இனிவரும் அனைத்துத் தேர்தல்களிலும் தவெக மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தாங்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் அரசியல் பாடம் பயின்றவர்கள் என்று குறிப்பிட்ட சி. விஜயபாஸ்கர், அதே தொலைநோக்குத் திட்டத்துடனும் இலக்குடனும் தவெகவின் கொள்கைகளுக்கு ஏற்ப கட்சியின் வெற்றிக்கு முழுமையாகப் பாடுபடுவோம் என்றார். குதிரை பேரம் மூலம் அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைவதாக எதிர்க்கட்சிகள் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளது குறித்த கேள்விக்கு, எதிர்க்கட்சிகள் தங்கள் அரசியலைச் செய்கிறார்கள் என்று அவர் சுருக்கமாகப் பதிலளித்தார்.

   

எதிர்க்கட்சிகளின் ‘வாஷிங் மெஷின்’ குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், ஆளும் கட்சியாக இருப்பவர்கள் எதிர்க்கட்சிகள் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு வழக்குத் தொடுப்பது வழக்கம் என்றும், அத்தகைய வழக்குகளை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராகவே இருப்பதாகவும் கூறினார். “கூட இருக்கும் வரை நல்லவர்கள், வெளியேறிவிட்டால் துரோகிகள் என்பது என்ன நியாயம்?” என்று கேள்வி எழுப்பிய அவர், தங்களுக்குப் பிடித்த, தங்களை வரவேற்கும் இயக்கத்தில் இணைந்துள்ளதாகத் திட்டவட்டமாகக் கூறினார்.