“அம்மா.. என் செல்போனை செக் பண்ணுங்க, எல்லாமே இருக்கு!” – தற்கொலைக்கு முன் இளம்பெண் வெளியிட்ட அந்த ஆடியோ… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

By SATHISH R on ஆடி 2, 2026

Spread the love

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞம் பகுதியில், போதை கணவனின் தொடர் சித்ரவதை தாளாமல் விக்னேஸ்வரி (27) என்ற ஐ.டி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்த விக்னேஸ்வரிக்கும், விழிஞ்ஞத்தைச் சேர்ந்த அபிலாஷ் (32) என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தங்களின் இரண்டாவது திருமண நாளைக் கொண்டாடிய சில நாட்களிலேயே, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விக்னேஸ்வரி இந்த துயர முடிவை எடுத்துள்ளார். பூட்டியிருந்த வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துப் பார்த்தபோதுதான் அவர் சடலமாகத் தொங்குவது தெரியவந்தது.

   

விக்னேஸ்வரி தற்கொலை செய்வதற்கு முன்னதாக எழுதிய உருக்கமான கடிதம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதில், “இனி இங்கு வாழ முடியாது. மது குடித்துவிட்டு கணவர் அபிலாஷ் தொடர்ந்து சித்ரவதை செய்து வந்தார். அப்பா இதய நோயாளி என்பதால் அவரிடம் எதையும் சொல்லவில்லை. நான் ஏற்றுக்கொண்ட ஒரு ஐ.டி நிறுவனத்தின் ப்ராஜெக்ட் முடியும் வரை மட்டுமே எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு பொறுத்திருந்தேன். எனது இந்த முடிவுக்கு அபிலாஷும் அவரது மதுப்பழக்கமும்தான் காரணம். ஸாரி அப்பா, அம்மா…” என்று தனது குமுறல்களையும், தற்கொலைக்கான காரணத்தையும் அதில் பதிவு செய்துள்ளார்.

   

மேலும், தனது கடிதத்தில் “அம்மா, எனது செல்போனை நன்றாகப் பரிசோதிக்க வேண்டும்; எல்லா ஆதாரங்களும் அதில் உள்ளன” என்று விக்னேஸ்வரி குறிப்பிட்டிருந்தார். அதன்படி காவல்துறையினர் அவரது செல்போனை ஆய்வு செய்தபோது, கணவர் கொடுத்த உடல் ரீதியான சித்ரவதைகளால் ஏற்பட்ட காயங்களின் புகைப்படங்கள் மற்றும் தனது தாய்க்காக அவர் உருக்கமாகப் பேசி பதிவு செய்து வைத்திருந்த வாய்ஸ் ரெக்கார்டிங் (ஒலிப்பதிவு) ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. இந்த ஆதாரங்கள் அனைத்தும் அவர் அனுபவித்த கொடுமைகளையும், கணவனின் கொடூர முகத்தையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன.

 

இறந்த விக்னேஸ்வரியின் கடிதம் மற்றும் செல்போனில் இருந்த வலுவான ஆதாரங்களின் அடிப்படையில், அவரை தற்கொலைக்குத் தூண்டியதாகக் கணவர் அபிலாஷ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தனியார் பேமெண்ட் ஆப் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அபிலாஷை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். விக்னேஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. குடும்ப அமைதிக்கும் பெண்களின் பாதுகாப்பிற்கும் மதுப்பழக்கம் எவ்வளவு பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் உணர்த்துகிறது.