சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், அதிமுகவிடம் ஏன் ஆதரவு கோரவில்லை என்பது குறித்து தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விரிவான விளக்கமளித்துள்ளார். அண்மையில் தவெக தலைவர் விஜய்யை தோழமைக் கட்சித் தலைவர்கள் சந்தித்ததை சுட்டிக்காட்டிய அவர், தேர்தல் முடிவுகளின் போது திரைக்குப் பின்னால் நடந்த அதிரடி அரசியல் நகர்வுகளையும், திமுக-அதிமுக இடையே நடைபெற்ற ரகசிய பேச்சுவார்த்தைகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருந்த வேளையிலேயே, தமிழக அரசியலில் பரம எதிரிகளாகக் கருதப்படும் திமுக மற்றும் அதிமுக கைகோர்க்கத் தொடங்கிவிட்டதாக ஆதவ் அர்ஜுனா பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அவரது மகன் மிதுனும் இணைந்து கூட்டு ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார். முதல் இரண்டரை ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமியும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் உதயநிதியும் முதலமைச்சராகப் பதவி வகிக்கும் வகையிலான இந்த “புடலங்காய் கூட்டணி” உடன்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி மற்றும் தோழமை கட்சித் தலைவர்கள் பகிரங்கமாக உடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ரகசிய பேச்சுவார்த்தையை அதிமுக தொண்டர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் என்று அமைச்சர் சாடியுள்ளார். திமுகவை எதிர்த்துதான் எம்.ஜி.ஆர் அதிமுகவைத் தொடங்கினார் என்றும், சட்டமன்றத்தில் ஜெயலலிதா அவமானப்படுத்தப்பட்ட நிகழ்வை சுட்டிக்காட்டியும் பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வம் திமுகவுடன் இணக்கமாக இருந்தபோது ‘துரோகி’ என்று விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, இன்று ஒட்டுமொத்த கட்சியையுமே திமுகவிடம் அடகு வைக்கத் துணிந்துவிட்டதாகக் கொந்தளித்துள்ளார். மேலும், தன் மகனுக்குப் பதவியாசை இல்லை என்று கூறும் எடப்பாடி பழனிசாமி, மிதுனை அதிமுக இளைஞரணிப் பொறுப்பில் அமர்த்துவதற்கான தீர்மானங்களை ரகசியமாகத் தயாரித்து வருவதாகவும், உதயநிதி ஸ்டாலினைப் போல மிதுனையும் கட்சியின் சீனியராகக் காட்டுவதற்கே உறுப்பினராக வைத்துள்ளனர் என்றும் அவர் சாடியுள்ளார்.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களின் சுயநல அரசியலுக்காக வரும் உள்ளாட்சித் தேர்தல் அல்லது மக்களவைத் தேர்தலின் போது அதிகாரப்பூர்வமாகத் தங்களின் கூட்டணியை அறிவிப்பார்கள் என்று ஆதவ் அர்ஜுனா கணித்துள்ளார். கொள்கை ரீதியாகத் தவெக உறுதியாக இருந்ததால்தான், இத்தகைய துரோக அரசியலில் ஈடுபட்ட அதிமுகவிடம் ஆதரவு கேட்கவில்லை என்ற அரசியல் நிலைப்பாட்டை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இறுதியில், எடப்பாடி பழனிசாமியின் இந்த நகர்வுகளால் அதிருப்தியடைந்துள்ள ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களும் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
