இமாச்சலப் பிரதேசத்தின் மணாலி அருகே உள்ள அடல் சுரங்கப்பாதையின் வடக்கு நுழைவாயில் பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற அதிர்ச்சிகரமான கார் விபத்தில், ராஜஸ்தானைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர். ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியைச் சேர்ந்த கைலாஷ் (34) என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்தவர் ஆவார். இவர்களுடன் பயணித்த ஆதித்யா, ராஜேந்திரா மற்றும் காரை ஓட்டி வந்த சித்தார்த் ஆகியோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மணாலியிலிருந்து லாஹவுல் நோக்கி ஸ்கார்பியோகாரில் சென்றுகொண்டிருந்த இந்த நண்பர்கள் குழு, அதிவேகமாக வந்ததே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சுரங்கப்பாதையை விட்டு வெளியேறிய சிறிது நேரத்திலேயே, காரின் ஓட்டுநர் வளைவு ஒன்றில் வாகனத்தைக் கட்டுப்படுத்தத் தவறியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், சந்திரா ஆற்றை நோக்கி பாய்ந்து அங்கு கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தின் கட்டுமானப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின் தீவிரம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது. கட்டுமானப் பணியில் இருந்த பாலத்தின் கூர்மையான இரும்பு கம்பிகள் காரின் உடற்பகுதியை முழுமையாகக் கிழித்துக் கொண்டு உள்ளே பாய்ந்ததில், கார் முற்றிலும் நசுங்கி இடிபாடுகளுக்குள் சிக்கியது. இதுதொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகிப் பரவி வருகின்றன. தற்போது மழைக்காலம் என்பதால் மலைப்பாதைகளில் சாலைகள் வழுக்கக்கூடிய அபாயமும், பனிமூட்டம் காரணமாகப் பார்வைத்திறன் குறையவும் வாய்ப்புள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகள் மலைப்பிரதேசங்களில் இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்குமாறும், மிதமான வேகத்தில் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்குமாறும் காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
