தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. டாஸ்மாக் பார்களுக்கான டெண்டர் கால அவகாசம் முடிவடைந்த நிலையில், மறு உத்தரவு வரும் வரை எந்தவொரு பாரையும் திறக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த பார்களுக்கான கால அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக இன்று காலையில்தான் உத்தரவு வெளியானது. ஆனால், சில மணி நேரங்களிலேயே அந்த உத்தரவு அதிரடியாக ரத்து செய்யப்பட்டு, பார்களை உடனடியாக மூடுவதற்கான இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் உத்தரவின் காரணமாக, மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்கள் அனைத்தும் இன்றுடன் மூடப்படுகின்றன. டெண்டர் விதமுறைகள் மற்றும் அது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை மதுப்பிரியர்கள் மற்றும் பார் உரிமையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறு உத்தரவு வரும் வரை விதிகளை மீறி பார்களை திறந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
