செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே கலவாக்கம் பகுதிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வருகை தந்தார். உயர் நீதிமன்ற ஆணைக்கிணங்க, தமிழகத்தின் சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலாக விளங்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிக்காக அவர் அங்கு வந்திருந்தார். திருப்போரூர் வருகை தந்த வைகோவுக்கு மதிமுக தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “சீமைக்கருவேல மரங்களின் நிழலில் ஆடு மாடுகள் கூட தங்காது; கேரளாவில் ஒரு கருவேல மரத்தை கூட பார்க்க முடியாது. தமிழகத்தை மொத்தமாக அழித்து வரும் இந்த மரங்களை நாம் முழுமையாக அகற்ற வேண்டும். மதிமுக என்பது ஓட்டுக்காக இயங்கும் கட்சி அல்ல, நாட்டுக்காக இயங்கும் கட்சி. கருவேல மரங்களை அகற்றுவதால் எங்களுக்கு ஒரு ஓட்டு கூட விழாது. தமிழக மக்களைக் காப்பாற்றவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மட்டுமே மதிமுக இந்தத் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து அரசியல் குறித்துப் பேசிய அவர், திமுகவை கடுமையாக விமர்சித்தார். “அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்தது குறித்து திமுகவினர் குதிரை பேரம் எனப் பேசுகின்றனர். ஆனால், கம்பம் தொகுதியில் பம்பரம் சின்னத்தில் வெற்றி பெற்றவரை ராஜினாமா செய்ய வைத்ததே திமுகதான். இந்த குதிரை பேர அரசியல் கலாச்சாரத்தைத் துவங்கி வைத்ததே அவர்கள்தான். அதிமுகவின் அனிதா ராதாகிருஷ்ணனை ராஜினாமா செய்ய வைத்ததும் திமுகதான். திமுக ஆட்சியில் கரப்சன், கமிஷன், கனெக்ஷன் மட்டுமே இருந்தது. தற்போது தவெகவுடன் மதிமுக கூட்டணி வைத்துள்ளது. இந்த ஐந்து ஆண்டுகள் மட்டுமல்ல, அடுத்த ஐந்து ஆண்டுகளும் விஜய் தான் தமிழக முதல்வர். எங்களுக்கு இனி எடுத்ததெல்லாம் வெற்றிதான்” என்று அதிரடியாகத் தெரிவித்தார்.
வைகோவின் இந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, செய்தியாளர் ஒருவர், “நீங்கள் திமுக கூட்டணியில் நீடித்தபோது இந்த கரப்சன், கமிஷன், கனெக்ஷன் எல்லாம் உங்களுக்குத் தெரியவில்லையா?” என்று கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்வியால் கடும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த வைகோ, “நீங்கள் மட்டும்தான் கேள்வி கேட்பீர்களா? நாங்களும் உங்களிடம் கேள்வி கேட்போம்” என்று கூறி, “நீங்கள் எந்தப் பத்திரிகை? எந்தச் செய்தியாளர்?” என அடுக்கடுக்கான கேள்விகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, வைகோவின் கோபத்தைக் கண்டு அங்கிருந்த மதிமுக நிர்வாகிகள் கேள்வி கேட்ட செய்தியாளரை நோக்கி அடிக்கப் பாய்ந்து, தாக்க முயன்றனர். இதனால் செய்தியாளர்கள் சந்திப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டு, அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.
