தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் களம் பெரும் திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. இதில் குறிப்பாக, அதிமுகவிலிருந்து விலகி தனது விராலிமலை எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு பெரும் சஸ்பென்ஸை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் திமுகவில் இணைய அவர் முயன்றதாகக் கூறப்பட்டாலும், தற்போது அவரது முழுக் கவனமும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மீதே உள்ளது. விராலிமலை தொகுதிக்கு வரவிருக்கும் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளராக மீண்டும் களம் காண வேண்டும் என்பதே அவரது முதன்மைத் திட்டமாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், சி. விஜயபாஸ்கரை கட்சியில் இணைப்பது தொடர்பாக தவெக தலைமைக்குள் இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. தவெக தலைவரும் முதல்வருமான விஜய்யின் முக்கிய ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமி, விஜயபாஸ்கர் மீதான சட்ட ரீதியான வழக்குகளைக் சுட்டிக்காட்டி அவரைச் சேர்க்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரம், தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் மூலமாக விஜயபாஸ்கர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். கடந்த ஜூன் இறுதியில் நடைபெறவிருந்த இணைப்பு விழா, முதல்வர் விஜய்யின் மாநாட்டுப் பணிகள் மற்றும் தவெக தரப்பில் இருந்து உறுதியான சிக்னல் கிடைக்காதது போன்ற காரணங்களால் தொடர்ந்து தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது.
இத்தகைய சூழலில், கட்சியில் தனியாக இணைவதைக் காட்டிலும், அதிமுகவில் உள்ள அதிருப்தி நிர்வாகிகளைத் திரட்டி தனது அரசியல் பலத்தைக் காட்ட விஜயபாஸ்கர் திட்டமிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, சமீபத்திய அதிமுக உட்கட்சிப் பதவிகளில் முக்கியத்துவம் வழங்கப்படாததால் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை தவெக-விற்கு அழைத்துச் செல்ல அவர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். எஸ்.பி.வேலுமணி அணியிலிருந்து திரும்பிய சில முக்கிய நிர்வாகிகளுடனும் விஜயபாஸ்கர் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக புதுக்கோட்டை மற்றும் விழுப்புரம் வட்டாரப் பேச்சுக்கள் தமிழக அரசியலில் பரபரப்பைக் கூட்டியுள்ளன.
இந்த திடீர் அரசியல் நகர்வுகளால் சுதாரித்துக் கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம் கட்சியை விட்டு வெளியேறுவதைத் தடுக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவரை நேரடியாகத் தொடர்புகொண்டு சமாதானப்படுத்த எடப்பாடி பழனிசாமி முயன்றபோதிலும், சி.வி.சண்முகம் அவரது அழைப்புகளுக்கு இதுவரை பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், சி. விஜயபாஸ்கரின் தவெக இணைப்பு எப்போது நடக்கும் மற்றும் சி.வி.சண்முகத்தின் அடுத்தகட்ட அரசியல் முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்விகள் தமிழக அரசியலிலும், குறிப்பாக அதிமுக வட்டாரத்திலும் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளன.
