நடப்பு 2026 பிபா உலகக் கோப்பை வரலாற்றில், உலக கால்பந்து ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி இடையேயான நேருக்கு நேர் மோதல் நாக்-அவுட் சுற்றில் நடப்பதற்கான வாய்ப்பு மங்கிவிட்டது. ‘K’ பிரிவில் போர்ச்சுகல் அணி 5 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்ததாலும், அர்ஜென்டினா அணி ‘J’ பிரிவில் மூன்று போட்டிகளிலும் வென்று முதலிடம் பிடித்ததாலும், இரு அணிகளும் வெவ்வேறு நாக்-அவுட் பாதைகளுக்குத் தள்ளப்பட்டுள்ளன. தங்களின் 6-வது மற்றும் இறுதி உலகக் கோப்பைத் தொடரில் விளையாடும் இவ்விரு ஜாம்பவான்களும் இனி இறுதிப்போட்டியில் மட்டுமே நேருக்கு நேர் சந்திக்க முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.
குரூப் சுற்றுப் போட்டிகளில், 41 வயதான ரொனால்டோ உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிராக அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து தனது அசாத்திய எனர்ஜியை நிரூபித்தார். மறுபுறம், 39 வயதான மெஸ்ஸி முதல் இரண்டு போட்டிகளிலேயே ஹாட்ரிக் உட்பட 5 கோல்களை விளாசியதோடு, ஜோர்டானுக்கு எதிரான போட்டியில் மாற்று ஆட்டக்காரராக களமிறங்கி 60-வது நிமிடத்திற்குப் பிறகு ஒரு அபாரமான ஃப்ரீ கிக் கோலையும் அடித்து மிரட்டியுள்ளார். இதுவரை சர்வதேச, கிளப் மற்றும் நட்பு ரீதியிலான போட்டிகளில் 36 முறை நேருக்கு நேர் மோதியுள்ள இவர்கள், உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை ஒருமுறை கூட நேருக்கு நேர் மோதியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஜூன் 29 முதல் தொடங்கும் ரவுண்ட் ஆப் 32 நாக்-அவுட் சுற்றில், போர்ச்சுகல் அணி பலம் வாய்ந்த குரோஷியாவை எதிர்கொள்கிறது; இதில் வென்றால் ரவுண்ட் ஆப் 16 சுற்றில் ஸ்பெயின் அல்லது ஆஸ்திரியாவைச் சந்திக்கும். அதே நேரத்தில் அர்ஜென்டினா அணி ரவுண்ட் ஆப் 32 சுற்றில் கேப் வெர்டே அணியை எதிர்கொள்கிறது; அதில் வெற்றி பெற்றால் ரவுண்ட் ஆப் 16 சுற்றில் ஆஸ்திரேலியா அல்லது எகிப்து அணியுடன் மோத வேண்டியிருக்கும். இந்தத் தனித்தனி நாக்-அவுட் பாதைகளைக் கடந்து, இறுதிப்போட்டியில் இந்த இரு முரட்டு காளைகளும் மோதிக்கொள்ளுமா என்பதை அறிய ஒட்டுமொத்த கால்பந்து உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது.
