அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இலவச உணவு தானியங்களின் அளவில் மத்திய அரசு முக்கிய மாற்றங்களைச் செய்யப் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய நடைமுறைப்படி, வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள ஏழைப் பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாமல், குடும்பத்திற்குத் தலா 35 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், புதிய பரிசீலனையின்படி, குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த அளவு மாற்றியமைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது; அதன்படி, இருவர் மட்டுமே உள்ள சிறிய குடும்பங்களுக்கு நபர் ஒருவருக்கு 7 கிலோ வீதம் மொத்தம் 14 கிலோவும், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட பெரிய குடும்பங்களுக்கு மாதத்திற்கு அதிகபட்சமாக 35 கிலோ வரையிலும் இலவச உணவு தானியங்களை வழங்க அரசு திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.
