தேர்தலில் போட்டியிட வாய்ப்பு (சீட்) கிடைக்காததால் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு முக்கியக் கட்சிப் பொறுப்புகளை வழங்கி சமாதானப் படுத்தி வருகிறார். அந்த வகையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட பெரிதும் எதிர்பார்த்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு சீட் வழங்கப்படாததற்கு, முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜிதான் காரணம் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரவலாக எழுந்தது.
இதனால் கடும் அதிருப்தியடைந்த மாஃபா பாண்டியராஜன், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையக்கூடும் என்ற தகவல் வேகமாகப் பரவிய நிலையில், கட்சித் தலைமை உடனடியாகத் தலையிட்டு அவருக்கு அதிமுகவின் “அமைப்புச் செயலாளர்” என்ற உயரிய பொறுப்பை வழங்கி, அவரது அதிருப்தியைப் போக்கி சமாதானம் செய்துள்ளது.
