தமிழகத்தில் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்கோடு, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு ‘மாவட்ட வாரியான போதைப்பொருள் தடுப்புப் படை’ என்ற புதிய சிறப்புப் பிரிவை உருவாக்கியுள்ளது. இந்தப் படை இன்னும் முழுமையாக அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்படாத நிலையிலேயே, மாநில எல்லைகளைக் கடந்து ஒரு மெகா ஆபரேஷனை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. சென்னையில் மெத்தம்பேட்டமைன் போதைப்பொருளுடன் சிக்கிய சங்கீதா, சிரஞ்சேவி, ஜான் ஆகிய சில்லறை வியாபாரிகளிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், இந்த நெட்வொர்க்கின் முக்கியக் குற்றவாளியான சண்முகம் என்பவர் மகாராஷ்டிர மாநிலம் ஊஞ்சு பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சென்னை கீழ்ப்பாக்கம் தனிப்படையினர் உடனடியாக மகாராஷ்டிரா விரைந்து, அங்குள்ள உள்ளூர் போலீசாரின் உதவியுடன் சண்முகத்தை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சண்முகத்திடமிருந்து சர்வதேசச் சந்தையில் பல லட்சம் மதிப்புள்ள 350 கிராம் உயர்தர ‘மெத்’ போதைப்பொருள், எம்.டி.எம்.ஏ, எல்.எஸ்.டி ஸ்டாம்புகள் மற்றும் ஓஜி கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டிராவல்ஸ் தொழில் செய்து வந்த சண்முகம், பெங்களூரு சென்றபோது நைஜீரியக் கடத்தல் கும்பலுடன் ஏற்பட்ட பழக்கத்தைப் பயன்படுத்தி, சென்னைக்குச் சொகுசுப் பேருந்துகள் மூலம் வீரியமிக்கச் செயற்கை போதைப்பொருட்களைக் கடத்தி வந்த அதிர்ச்சிப் பின்னணி அம்பலமாகியுள்ளது. சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் மாரத்தான் போட்டியை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்த அதே தினத்தில், அவர் அறிவித்த தனிப்படை மகாராஷ்டிராவில் வைத்து இத்தகைய பெரிய டீலரைக் கைது செய்து தனது முதல் கணக்கைத் தொடங்கியிருப்பது தமிழகக் காவல் துறையின் மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
