திமுக கூட்டணியில் இருந்தபோதும் , தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியில் இருக்கும்போதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து இழிவாக விமர்சிக்கப்பட்டு, குறிவைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார். விசிகவின் வளர்ச்சியைப் பிடிக்காதவர்களும், அரசியல் எதிரிகளும் கட்சியைத் திட்டமிட்டுப் பலவீனப்படுத்த முயல்வதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இத்தகைய சவாலான சூழலில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகவும் எச்சரிக்கையுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
அரசியல் ரீதியாகத் தங்களை வீழ்த்த எதிரிகள் தீவிரமாக வியூகம் அமைத்து வரும் வேளையில், நாம் அவர்களை விட இன்னும் மிகத் தீவிரமாகவும் சுறுசுறுப்பாகவும் களத்தில் இறங்கிச் செயல்பட வேண்டும் என்று தனது கட்சி நிர்வாகிகளிடையே திருமாவளவன் உரையாற்றியுள்ளார். மேலும், தங்களுக்கு எதிராகக் கிளப்பப்படும் அவதூறுகளையும் விமர்சனங்களையும் முறியடித்து, கட்சியின் கொள்கைகளையும் பலத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது தற்போதைய கட்டாயத் தேவை என்பதையும் அவர் தனது உரையில் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.
