பேன்ட் பைக்குள் இவ்ளோ கோடியா…? பசை வடிவில் வந்த ரூ. 3.36 கோடி தங்கம்… செக் பாயிண்ட்டில் ‘லாக்’ ஆன மலேசிய பயணிகள்…!

By Swetha on ஆனி 26, 2026

Spread the love

ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில், மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து வந்த இரண்டு இந்தியப் பயணிகளிடமிருந்து ரூ3.36 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுங்கத்துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் அந்த இரு பயணிகளையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.

அதிகாரிகள் நடத்திய விரிவான உடல் பரிசோதனையின் போது, அந்தப் பயணிகள் தங்கத்தைக் கடத்த கையாண்ட நூதன முறை வெளிச்சத்திற்கு வந்தது. அவர்கள் அணிந்திருந்த கால்சட்டைகளின் இடுப்புப் பகுதியில் பிரத்யேகமாக தைக்கப்பட்ட பைகளுக்குள், வெள்ளை செலோபேன் டேப் மூலம் சுற்றப்பட்ட பசை வடிவிலான தங்கத்தை மறைத்து வைத்திருந்தனர்.

   

கைப்பற்றப்பட்ட இந்தத் தங்கப் பசையை நகை வியாபாரிகளின் உதவியுடன் பிரித்தெடுத்து ஆய்வு செய்ததில், அது 2.271 கிலோ எடையுள்ள 24 கேரட் சுத்தமான தங்கம் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சுங்கச் சட்டம் 1962-ன் கீழ் அந்த இரண்டு பயணிகளையும் அதிகாரிகள் கைது செய்து, இந்த சர்வதேச கடத்தலுக்குப் பின்னால் இருக்கும் கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.