“போர் முடிந்ததுன்னு நினைச்சா”… நடுவழியில் கப்பலுக்கு நடந்த பயங்கரம்… ஹார்முஸ் ஜலசந்தியில் நடந்த ‘அந்த’ ஒரு சம்பவம்…. உலக நாடுகள் அதிர்ச்சி…!

By Nanthini on ஆனி 26, 2026

Spread the love

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர், இருதரப்பு ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, சர்வதேச வர்த்தகத்திற்கு முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டது. இதன் வழியாக கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் பிற சரக்குக் கப்பல்களின் போக்குவரத்து வழக்கம் போல் தொடங்கினாலும், அப்பகுதியில் ஒருவித அச்சமான சூழலே நிலவி வந்தது. இந்நிலையில், சிங்கப்பூர் நாட்டு கொடியுடன் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற ‘எவர் லவ்லி’ என்ற சரக்கு கப்பல் மீது திடீரென நடத்தப்பட்ட தாக்குதல் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓமானின் தஹித் (Dahit) துறைமுகத்திற்கு தென்கிழக்கே சுமார் 7.5 கடல் மைல் தொலைவில் இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. கப்பலின் கட்டுப்பாட்டு அறை (Bridge) அமைந்துள்ள ஸ்டார்போர்ட் பகுதியில் ஏவுகணை அல்லது ட்ரோன் போன்ற ஒரு பொருள் தாக்கியதில் பலத்த சேதமடைந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் மாலுமிகள் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. இந்தத் தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாத நிலையில், இதன் பின்னணியில் ஈரான் இருக்கக்கூடும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் இருவர் தெரிவித்துள்ளனர். ஆனால், இச்சம்பவம் குறித்து ஈரான் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

   

இந்த திடீர் தாக்குதல் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கித் தவிக்கும் நூற்றுக்கணக்கான கப்பல்களையும், மாலுமிகளையும் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக ஐநா சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) மேற்கொண்டு வந்த மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி இறுதியில் போர் தொடங்கியதில் இருந்து பல மாதங்களாக இப்பணியை IMO தொய்வின்றி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஐநா சர்வதேச கடல்சார் அமைப்பின் பொதுச்செயலாளர் ஆர்செனியோ டொமிங்குவேஸ் கூறுகையில், தற்போதைய பாதுகாப்புச் சூழல் காரணமாக மாலுமிகளை வெளியேற்றும் பணி தடைபட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்.

   

சமீபத்தில் வளைகுடா நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, “ஈரான் கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என எச்சரித்திருந்த நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதனால், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதுடன், அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற பெரும் பதற்றமும் உலக அரங்கில் எழுந்துள்ளது.