தலைநகர் டெல்லியின் நாங்லோய் பகுதியில் வசித்து வந்த 24 வயதான டினா என்ற திருமணமான பெண், கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் அவரது கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இவருக்கும் இவரது கணவருக்கும் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ‘மோனா’ என்ற பெண் குழந்தை உள்ளது. டினாவின் மரணம் குறித்து தகவல் அறிந்த போலீஸார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையைத் தொடங்கினர்.
போலீஸாரின் விசாரணையின் போது, டினாவின் மொபைல் போனிலிருந்து அவர் இறப்பதற்கு முன்பு பதிவு செய்த 3 நிமிடங்களுக்கும் அதிகமான உருக்கமான வீடியோ ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த வீடியோவில், “நான் போகிறேன் அப்பா, இனி உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டேன்” என்று கூறும் டினா, தனது மாமியார் வீட்டார் தன்னைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தியதாகவும், அவர்கள் தன்னை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தான் யாருடனும் சண்டையிடவில்லை என்றும், தன் மீது சுமத்தப்பட்ட மாந்திரீகம் (பில்லி சூனியம்) போன்ற குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்றும், உண்மையில் தனக்குத்தான் அங்கு அடிஉதை மற்றும் சித்திரவதை கிடைத்தது என்றும் அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
வீடியோவில் டினா தனது பெற்றோரிடம், தன் மகள் மோனாவைத் தனது கணவரிடமோ அல்லது வேறு யாரிடமோ கொடுத்துவிட வேண்டாம் என்றும், தனது தாயே இனி அந்தக் குழந்தைக்கு அம்மாவாக இருந்து வளர்க்க வேண்டும் என்றும் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தத் தற்கொலை வழக்கு தொடர்பாக டினாவின் பெற்றோரது வாக்குமூலங்கள் சப்-டிவிஷனல் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது போலீஸார் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்தும், மாமியார் வீட்டார் மீதான வரதட்சணை மற்றும் கொடுமைப்படுத்துதல் குற்றச்சாட்டுகள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
