உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவருடைய நிறுவனத்தில் ரூ100 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடந்துள்ளதாகவும், அதற்குரிய ரூ28 கோடி ஜிஎஸ்டி வரியைச் செலுத்தவில்லை என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. எளிய தொழில் செய்யும் ஒருவருக்கு இவ்வளவு பெரிய தொகையிலான நோட்டீஸ் வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் ஒரு அதிர்ச்சிகரமான மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிரஜாபதி தனது சகோதரியின் திருமணத்திற்காகக் கடன் வாங்க நினைத்து, அதற்கான ஆவணங்களை அமித் என்பவரிடம் கொடுத்துள்ளார். அமித் அந்த ஆவணங்களைப் பயன்படுத்தி பிரஜாபதியின் பெயரில் ஒரு போலி நிறுவனத்தைத் தொடங்கி, இந்த ரூ100 கோடி அளவிலான ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
