சென்னையில் லஞ்ச விவகாரத்தில் லஞ்சம் வாங்கிய மின் வாரிய ஒழுங்கு நடவடிக்கை பிரிவு உதவியாளர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு ₹10,000 லஞ்சம் வாங்கிய புகாரில் மின் வாரிய உதவிப் பொறியாளர் பாலசுப்பிரமணியன் என்பவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். அவர் மீண்டும் பணியில் சேருவதற்காக மின் வாரிய தலைமை அலுவலகத்தில் முறையீடு செய்தபோது, அங்கிருந்த ஒழுங்கு நடவடிக்கை பிரிவு உதவியாளர் பாலாஜி என்பவர் பாலசுப்பிரமணியனிடம் மீண்டும் பணியமர்த்த ₹1.30 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து லஞ்சம் கொடுக்க விரும்பாத பாலசுப்பிரமணியன், லஞ்ச ஒழிப்புத்துறையிடம் (DVAC) இது குறித்துப் புகார் அளித்தார். அவர்களின் ஆலோசனையின்படி, முதற்கட்ட முன்பணமாக ₹50,000-த்தை பாலாஜியிடம் பாலசுப்பிரமணியன் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பாலாஜியைக் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். லஞ்சப் புகாரில் சஸ்பெண்ட் ஆன ஒருவரிடமே, மீண்டும் பணியில் சேர லஞ்சம் கேட்டு அதிகாரி பிடிபட்ட இச்சம்பவம் மின் வாரிய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
