ரூ .8 கோடி மோசடி செஞ்ச உனக்கு TVK பாதுகாப்பாடா.? சொந்த கட்சி எம்எல்ஏ-வை போனில் வெளுத்து வாங்கிய பிரமுகர் – வைரலாகும் ‘பீப்’ ஆடியோ…!!

By Soundarya on ஆனி 23, 2026

Spread the love

தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் அக்கட்சியினரின் பல்வேறு செயல்பாடுகள் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி வருகின்றன. அந்த வகையில், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி தவெக எம்எல்ஏ நவல்பட்டு விஜி மற்றும் தவெக மாவட்ட செயலாளர் அருள் ஆகிய இருவருக்கும் இடையே கட்சிக்குள் ஏற்கனவே கருத்து வேறுபாடுகளும் உரசல்களும் நிலவி வருகின்றன. இதற்கிடையே, மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகிப் பல புதிய நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருகின்றனர். அவ்வாறு இணையும் சிலரது குற்றப் பின்னணிகள் கட்சித் தலைமைக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், திருவெறும்பூரைச் சேர்ந்த அதிமுக ஜெ.பேரவை பகுதி செயலாளரான சபரி என்பவர், கடந்த மாதம் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார். சுமார் 8 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் சபரி, தவெகவில் இணைந்தது முதல் எம்எல்ஏ விஜிக்கு எதிரான பிரிவைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் அருளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இது எம்எல்ஏ விஜி தரப்பிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

   

இந்நிலையில், எம்எல்ஏ நவல்பட்டு விஜிக்கும் புதிய நிர்வாகி சபரிக்கும் இடையே தொலைபேசியில் நடந்த உரையாடலின் ஆடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில், சபரியை நேரில் வருமாறு அழைக்கும் எம்எல்ஏ விஜி, ஒரு கட்டத்தில் முகஞ்சுளிக்கும் வகையிலான ஆபாசமான கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி (பீப் ஒலியுடன்) அவரை மிகக் கடுமையாகத் திட்டியுள்ளார்.

   

எம்எல்ஏவின் ஆபாசப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த சபரி, “பண மோசடி செய்துவிட்டு பாதுகாப்பு தேடி கட்சிக்கு வந்தாயா?” எனக் கேட்ட விஜியிடம், “கெட்ட வார்த்தை பேச வேண்டாம், இதுகுறித்து விஜய் அண்ணனிடம் புகார் அளிப்பேன்” என்று கூறியுள்ளார். மேலும், “மக்கள் உனக்காக வாக்களிக்கவில்லை, விஜய் அண்ணனுக்காகத்தான் வாக்களித்தார்கள்; மரியாதையாகப் பேசு” எனச் சபரி பதிலடி கொடுக்க, விஜியோ தொடர்ந்து கெட்ட வார்த்தைகளால் சரமாரியாகத் திட்டும் விதமாக அந்த ஆடியோ உரையாடல் அமைந்துள்ளது.