பீகார் மாநிலம் முசாபர்பூரில், காணாமல் போன தனது மனைவியைக் கண்டுபிடித்துத் தருமாறு கணவர் ஒருவர் சமூக ஊடகங்களில் கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ பதிவு, ஒரு கொடூரமான கௌரவக் கொலையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. காதலித்துத் திருமணம் செய்து கொண்ட தனது மனைவி சுஜாதாவைக் காணவில்லை என்று கௌரி சங்கர் என்பவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, காவல்துறை தீவிர விசாரணை நடத்தத் தொடங்கியது.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சுஜாதாவின் சொந்த சகோதரனான அபிஷேக் குமார் மற்றும் அவரது குடும்பத்தினரே இந்தத் துயரச் சம்பவத்திற்குக் காரணம் என்பது தெரியவந்தது. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த கௌரி சங்கரை சுஜாதா காதலித்து, வீட்டை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டதால் அவரது குடும்பத்தினர் கடுமையான ஆத்திரத்தில் இருந்துள்ளனர். நீதிமன்றத்தில் சுஜாதா தனது கணவனுடன் வாழ விரும்புவதாகக் கூறிய போதிலும், ஹோலி பண்டிகையைக் காரணம் காட்டி அவரது தாய் சுஜாதாவை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் திட்டமிட்டபடி, சுஜாதாவின் சகோதரர் அபிஷேக் குமார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சுஜாதாவின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். மேலும், கொலையை மறைப்பதற்காக அவரது உடலை ரகசியமாகத் தகனம் செய்ததும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தற்பொழுது குற்றத்தை ஒப்புக்கொண்ட சகோதரர் அபிஷேக் குமாரை முசாபர்பூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
