ரயிலில் ஒரு குழந்தை.. ஆம்புலன்ஸில் ஒரு குழந்தை.. ஒரே நாளில் நடந்த விசித்திர இரட்டை குழந்தை பிறப்பு.. இணையத்தில் வைரல்..!!

By Soundarya on ஆனி 22, 2026

Spread the love

ஒடிசா மாநிலத்தில் ஓடும் ரயில் மற்றும் ஆம்புலன்ஸ் ஆகிய இரண்டு வெவ்வேறு வாகனங்களில் ஒரு கர்ப்பிணிப் பெண் தனது இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்த அரிய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. ரூர்கேலா-குனுபூர் ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப் பெட்டியில் பயணித்த அந்தப் பெண்ணுக்கு திடீரென கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை கவனித்த சக பயணிகள் உடனடியாக ‘ரயில் மதத்’ போர்ட்டல் மூலம் ரயில்வே நிர்வாகத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

ரயில் கட்டக் ரயில் நிலையத்தை அடைவதற்கு முன்பாகவே, சக பயணிகளின் உதவியுடன் ரயிலுக்குள்ளேயே அந்தப் பெண்ணுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் ரயில் நிலையம் வந்தடைந்ததும், பாதுகாப்புப் படையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் இணைந்து அந்தப் பெண்ணையும் குழந்தையையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ஆம்புலன்ஸிற்குள் அந்தப் பெண்ணுக்கு மீண்டும் பிரசவ வலி ஏற்பட்டு, இரண்டாவது குழந்தையும் சுகப்பிரசவமாக பிறந்தது.

   

தற்போது கட்டக் எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாயும், இரு குழந்தைகளும் முற்றிலும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இக்கட்டான இச்சூழ்நிலையில் சாதுரியமாகச் செயல்பட்டு பிரசவத்திற்கு உதவிய ரயில்வே ஊழியர்கள், ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மற்றும் சக பயணிகளுக்குச் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.