உன் மேல துர்நாற்றம் வருது.. தரையில கூட உட்காராத… மாதவிடாய் சிறுமியை வகுப்பறைக்கு வெளியே.. கதற கதற நிற்க வைத்த அரசு பள்ளி ஆசிரியை… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

By Swetha on ஆனி 22, 2026

Spread the love

சென்னை கோபாலபுரம் நடுநிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், மாதவிடாய் தொடர்பான உடல்நலப் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த நிலையிலும் நேற்று பள்ளிக்குச் சென்றுள்ளார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வகுப்பறையில் அமர்ந்திருந்த அந்த மாணவியிடம் சென்ற வகுப்பாசிரியர் செண்பகவல்லி, அவரிடமிருந்து துர்நாற்றம் வீசுவதாகக் கூறி வகுப்பறையை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும், வெளியே சென்ற மாணவியை தரையில் கூட அமரக்கூடாது எனக்கூறி, மாலை 4.10 மணி வரை பல மணி நேரம் வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்துள்ளார்.

சக மாணவர்கள் வகுப்பறைக்குள் பாடம் படித்துக்கொண்டிருக்க, தான் மட்டும் வெளியே நிற்க வைக்கப்பட்டதால் அந்தச் சிறுமி கடும் மனவேதனையும், கடுமையான கால் வலியும் அடைந்துள்ளார். பள்ளி முடிந்ததும் தனது மகளை அழைத்துச் செல்ல வந்த தந்தை ஏஜாஸ் அஹமத்திடம் அந்தச் சிறுமி அழுதுகொண்டே நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை, சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விளக்கம் கேட்க முயன்றபோது, அவர் உரிய பதில் அளிக்காமல் அலட்சியமாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

   

இந்த மனிதநேயமற்ற செயலால் தனது மகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி, தந்தை ஏஜாஸ் அஹமத் நேற்று மாலை திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர் செண்பகவல்லியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாதவிடாய் போன்ற இயற்கையான உடல்நிலை மாற்றம் காரணமாக ஒரு பள்ளி மாணவி பல மணி நேரம் அசிங்கப்படுத்தப்பட்டு, வெளியே நிற்க வைக்கப்பட்ட சம்பவம் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.