காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் வகுப்பறைக்குள் அத்துமீறி நுழைந்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தளவராம்பூண்டி ஊராட்சியில் உள்ள அந்தப் பள்ளிக்கு, தவெக ஒன்றிய செயலாளர் ராஜேஷ் தலைமையில் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர். அவர்கள் வகுப்பறை சுவரில் முதலமைச்சர் விஜயின் புகைப்படத்தை மாட்டி, மாணவர்களிடம் “இவர் யார் என்று தெரிகிறதா? இவர் தான் முதல்வர், உங்களுக்கு மாமா, எங்களுக்கு அண்ணன்” என்று பேசியுள்ளனர். மேலும், மாணவர்களுக்குப் பாடம் எடுப்பது போல நடித்து அதனை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
எந்தவொரு உள்ளாட்சிப் பொறுப்பிலும் இல்லாத நபர்கள், தவெக கட்சித் துண்டை அணிந்து கொண்டு, ஏதோ அரசு அதிகாரிகள் போல பள்ளிக்குள் நுழைந்தது அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவர்களின் கல்விக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், பள்ளிச் சூழலைக் கெடுக்கும் வகையிலும் நடந்து கொண்ட இவர்களின் செயல் பொதுமக்களிடையே கடும் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்துத் தகவலறிந்த அந்தப் பகுதியின் ஒன்றிய கவுன்சிலர் ஞானசேகரன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் உடனடியாகப் புகார் மனு அளித்துள்ளதுடன், அத்துமீறிய தவெக நிர்வாகிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவத்திற்குத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ‘எக்ஸ்’ (ட்விட்டர்) வலைத்தளப் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில் தவெகவினர் புகுந்து, முதலமைச்சர் விஜயின் புகைப்படத்தை மாட்டி ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் அரசுப் பள்ளிகளுக்குச் சரியான கட்டிடங்கள் கூட இல்லாமல் தரமிழந்து போய்விட்ட நிலையில், தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு அவற்றின் பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி முன்னால் இருக்கிறது. ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன” என்று அவர் சாடியுள்ளார்.
மேலும் தனது பதிவில், ஆளுங்கட்சியினர் என்பதற்காக அரசுப் பள்ளிகளுக்குள் சென்று வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை முதலமைச்சர் விஜய் அவர்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று நம்புவதாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற அநாகரிகமான செயல்கள் மீண்டும் நடைபெறாத வண்ணம், தங்களது கட்சியினருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு முதலமைச்சரையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார். அரசியல் ஆதாயத்திற்காகப் பள்ளிக் குழந்தைகளையும், கல்வி நிலையங்களையும் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்ற குரல் பரவலாக எழுந்து வருகிறது.
