“திமுக போட்ட திடீர் ஸ்கெட்ச்.. பதறிப்போன தவெக”… அம்பாசமுத்திரத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் கையில் எடுத்த அந்த ‘ரகசிய’ அஸ்திரம்.!

By Nanthini on ஆனி 20, 2026

Spread the love

நெல்லை மாவட்டத்தின் முக்கியத் தொகுதிகளில் ஒன்றான அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரவிருக்கும் நிலையில், தற்போதே அங்கு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, அண்மையில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இதனால் இந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, இடைத்தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. கடந்த தேர்தலில் அதிமுகவிடம் 10,245 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த திமுக கூட்டணி, இம்முறை நேரடியாக களம் கண்டு தொகுதியைக் கைப்பற்ற தற்போதே பலத்த வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளது.

இந்த முறை அம்பாசமுத்திரத்தில் தவெக மற்றும் அதிமுகவிற்கு கடும் சவால் கொடுக்கும் வகையில், தொகுதியில் கணிசமாக உள்ள குறிப்பிட்ட சமூக வாக்கு வங்கிகளைக் குறிவைத்து திமுக காய் நகர்த்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கிறிஸ்தவ நாடார் சமூகத்தைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் சாலமன் டேவிட்டை வேட்பாளராகக் களம் இறக்க அக்கட்சியின் தலைமை தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த தேர்தலில் தவெக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டாலும், இசக்கி சுப்பையாவின் தனிப்பட்ட செல்வாக்கு தவெக-விற்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க திமுக இந்த சமூகக் கணக்கை கையில் எடுத்துள்ளது.

   

திமுகவின் இந்த வியூகத்திற்குப் பின்னணியில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மிக முக்கியப் பங்கு வகித்து வருகிறார். சாலமன் டேவிட்டிற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ள அவர், “அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தல் பொறுப்பை என்னிடம் விட்டுவிடுங்கள், நிச்சயம் வெற்றியைத் தேடித்தருகிறேன்” என்று திமுக தலைமையிடம் நேரடியாகப் பேசி பொறுப்பேற்றுள்ளார். ஏற்கனவே அதிமுக நிர்வாகிகள் பலரை திமுக பக்கம் இழுக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வரும் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு, அப்பகுதி அதிமுக வட்டாரத்திலும் நல்ல செல்வாக்கு இருப்பதால், இம்முறை அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் களம் தவெக மற்றும் அதிமுகவிற்கு அத்தனை எளிதாக இருக்காது என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.