சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி வெள்ளாளபுரம் பகுதியைச் சேர்ந்த 20 வயது மாணவி கோபிகா, நீட் மறுதேர்வு குறித்த அச்சம் மற்றும் மன உளைச்சல் காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த 2024-ஆம் ஆண்டு பிளஸ் 2 முடித்த இவர், மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்ற இலக்குடன் தீவிரமாக நீட் தேர்வுக்குத் தயாராகி வந்தார்.
கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை கோபிகா எழுதியிருந்தார். ஆனால், நாடு முழுவதும் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடு புகார்கள் எழுந்ததால் அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21-ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்வுக்கான நாள் நெருங்கி வந்த நிலையில், மீண்டும் தேர்வை எதிர்கொள்வது குறித்து அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இவரது மரணம் குறித்து கொங்கணாபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் ஏற்கனவே ஒரு மாணவி இதே காரணத்திற்காக உயிரிழந்த நிலையில், தற்போது சேலத்திலும் மற்றொரு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாணவர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
