“இன்டர்வியூ போன இடத்தில் ஏரிக்கரைக்கு வந்த போன் கால்”… அடுத்த சில நிமிடங்களில் காதலித்த கணவன் செய்த வெறிச்செயல்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

By Nanthini on ஆனி 19, 2026

Spread the love

பெற்றோரின் எதிர்ப்பையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, காதலனை மட்டுமே நம்பி கரம் பிடித்த இளம்பெண் ஒருவர், அதே கணவனால் ஏரிக்கரையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியான ஆவலஹள்ளியைச் சேர்ந்த கணேஷ் என்பவரும், சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணியைச் சேர்ந்த 21 வயதான யோகினி என்ற பெண்ணும் கடந்த இரண்டு வருடங்களாகக் காதலித்து வந்தனர். இருதரப்பு பெற்றோரின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, காதலே முக்கியம் என்று வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகு கோலார் மாவட்டம் மாலூர் பகுதியில் வாடகை வீடு எடுத்து இந்த இளம் தம்பதி தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். ஆரம்பத்தில் இவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக நகர்ந்தாலும், சில மாதங்களிலேயே இவர்களுக்குள் கருத்து வேறுபாடுகளும் குடும்பத் தகராறுகளும் வெடிக்கத் தொடங்கின. இந்தச் சண்டைகளின் போது, கணேஷ் தனது காதல் மனைவி என்றும் பாராமல் யோகினியைக் கொடூரமாக அடித்து, உதைத்து சித்திரவதை செய்து வந்துள்ளார். கணவனின் இந்தத் தொடர் அராஜகத்தைத் தாங்க முடியாத யோகினி, மனமுடைந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கோபித்துக் கொண்டு தனது தாயார் கல்பனாவின் வீட்டிற்குத் தஞ்சமடைந்தார்.

   

தாயார் வீட்டிற்குச் சென்ற மனைவியைத் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு கணேஷ் நேரில் சென்றும், போன் மூலமும் அழைத்துள்ளார். ஆனால், கணவனின் அடி உதைக்கு மீண்டும் பலியாக விரும்பாத யோகினி அவருடன் செல்ல மறுத்துவிட்டு, சுயகாலில் நிற்க வேண்டும் என்ற முடிவோடு தீவிரமாக வேலை தேடி வந்தார். அப்போது, மாலூர் நரசாபுரா தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் நேர்காணல் நடப்பதை அறிந்து, அங்கு நம்பிக்கையோடு சென்றுள்ளார். இந்த விபரம் தெரிந்த கணேஷ், நேர்காணல் நடந்த இடத்திற்கே தேடி வந்து, சமரசம் பேசலாம் என்று கூறி அருகில் இருந்த மீண்டஹள்ளி ஏரிக்கரைக்கு யோகினியை அழைத்துச் சென்றுள்ளார்.

   

ஏரிக்கரையில் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது மீண்டும் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கணேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து யோகினியைச் சரமாரியாகக் குத்தியதில், அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொலைக்குப் பின் தப்பியோடாத கணேஷ், தனது மாமியாருக்குப் போன் செய்து, “உன் மகளைக் கொன்றுவிட்டேன்” என்று திமிராகக் கூறியுள்ளார். பதறிப்போன தாய் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மாலூர் போலீசார், யோகினியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, அங்கேயே நின்றிருந்த கொடூரக் கணவன் கணேஷை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.