“வீட்டுக்குள்ள தீய சக்தியை கொண்டு வாரா” 10 வருஷமா வேலை செய்த பணிப்பெண் மீது தீராத கோபம்… தோல் மருத்துவர் எடுத்த பகீர் முடிவு…!!!

By Soundarya on ஆனி 19, 2026

Spread the love

டெல்லியில் தன் வீட்டிற்குள் ‘நெகட்டிவ் எனர்ஜி’ (தீய சக்தி) கொண்டு வருவதாகக் கூறி, சுமார் 10 ஆண்டுகளாகத் தன் வீட்டில் பணிபுரிந்து வந்த பணிப்பெண்ணை 54 வயது தோல் மருத்துவர் ஒருவர் கொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டெல்லி கைலாஷ் ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் மனிஷ் குப்தா என்பவரே, தனது வீட்டில் வேலை செய்து வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மீனா (45) என்ற பெண்ணைத் தாக்கியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக அண்டை வீட்டார் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அமர் காலனி போலீஸார், உயிரிழந்த நிலையில் கிடந்த மீனாவின் உடலை மீட்டு மருத்துவரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், கைதான மருத்துவர் மனிஷ் குப்தா இச்செயலுக்கான காரணத்தைக் கூறியுள்ளார். பணிப்பெண் மீனா வீட்டிற்குள் ‘நெகட்டிவ் எனர்ஜியை’ கொண்டு வருவதாகவும், அது தனது மகனின் படிப்பு மற்றும் எதிர்காலத்தைப் பாதிப்பதாக அவர் கருதியுள்ளார். மேலும், தன்னை விடத் தனது குடும்பத்தினர் அந்தப் பணிப்பெண்ணுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக அவர் எண்ணியுள்ளார். இதனால் மீனாவை வேலையை விட்டு நீக்குமாறு தன் மனைவியிடம் அவர் வற்புறுத்தியுள்ளார், ஆனால் மனைவி அதற்கு மறுத்ததால் ஆத்திரமடைந்த மருத்துவர் இந்தச் செயலைச் செய்துள்ளார்.

   

சம்பவத்தன்று மீனா மாடியில் பணி செய்து கொண்டிருந்த போது, அங்கு சென்ற மருத்துவர் மனிஷ் குப்தா அவரைத் தாக்கி மரணத்தை ஏற்படுத்தியுள்ளார். போலீஸார் அங்கு சென்றபோது சம்பவ இடத்திலேயே மருத்துவர் இருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த மருத்துவர் மனஅழுத்தத்திற்கான மருந்துகளை உட்கொண்டு வந்ததாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு குறித்து டெல்லி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.