திமுகவிலிருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைவதாகத் தன் மீது வெளியாகும் அரசியல் வதந்திகளுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இதுவரை எந்தவொரு மறுப்போ விளக்கமோ அளிக்காமல் மௌனம் காப்பது தமிழக அரசியலில் பலத்த விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாகத் தன் மீது வரும் விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் உடனடியாக சமூக வலைத்தளங்கள் மூலமாகவோ அல்லது செய்தியாளர் சந்திப்பிலோ பதிலடி கொடுக்கும் குணம் கொண்ட செந்தில் பாலாஜி, இந்த விவகாரத்தில் காட்டும் அமைதி அரசியல் வட்டாரத்தில் பெரும் யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. அவரது இந்தத் திடீர் மௌனம் ஒருவேளை திரைமறைவில் நடக்கும் அரசியல் பேச்சுவார்த்தைகளின் அறிகுறியாக இருக்குமோ என்ற சந்தேகத்தை அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும் பலப்படுத்தியுள்ளது.
இந்த அரசியல் நகர்வுக்குப் பின்னால் கொங்கு மண்டலத்தின் உட்கட்சி அரசியலே முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. கோவையில் அதிமுகவின் வலுவான முகமாக விளங்கும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு மாற்றாக, அதே பிராந்தியத்தில் தேர்தல் வியூகங்களை வகுப்பதில் தனித்திறமை கொண்ட ஒரு முக்கிய புள்ளியை உருவாக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதன் காரணமாகவே, கொங்கு மண்டலத்தில் வேலுமணியின் அரசியல் ஆதிக்கத்திற்குச் செக் வைக்கும் நோக்கில் செந்தில் பாலாஜியை மீண்டும் அதிமுகவுக்குக் கொண்டு வர இபிஎஸ் தீவிரமாக அணுகி வருவதாகவும், அதனாலேயே செந்தில் பாலாஜி இதனை மறுக்காமல் மௌனம் காக்கிறார் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
