ரேஷன் கார்டுகளில் இன்னும் இறந்த நபர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் இடம் பெற்றுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெயர்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக இந்தத் தவறு நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தடுக்க, ரேஷன் கார்டில் உள்ள ஒவ்வொரு குடும்ப உறுப்பினரின் பயோமெட்ரிக் பதிவினை உறுதி செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், இறந்த நபர்களின் விவரங்களைச் சேகரித்து அறிக்கையாக அனுப்பி வைக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சில மாவட்டங்களில் ரேஷன் கார்டுகளுடன் இன்னும் ஆதார் எண் இணைக்கப்படாமலும், கைவிரல் ரேகை பதிவு செய்யப்படாமலும் சிலர் தொடர்ந்து பொருட்களைப் பெற்று வருகின்றனர். ரேஷன் பொருட்கள் வழங்குவதில் நடக்கும் இதுபோன்ற முறைகேடுகளை முற்றிலும் தவிர்க்கவே தற்போது பயோமெட்ரிக் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரை ஆதார் எண் இணைக்காதவர்கள் மற்றும் விரல்ரேகை பதிவு செய்யாதவர்கள் அதனை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேலை காரணமாக வெளியூர்களில் தற்காலிகமாக வசிப்பவர்களும் வரும் 25ஆம் தேதிக்குள் தங்களது கைவிரல் ரேகையைப் பதிவு செய்வது அவசியமாகும். மேலும், குடும்பத்தில் யாரேனும் இறந்திருந்தால், அவர்களது பெயர்களை ரேஷன் கார்டில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். இதற்கு குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி, உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து பெயர்களை நீக்கிக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
