கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக அரசியலில் விசிகவின் அசைக்க முடியாத முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் அதிரடியாகப் பேசினார். திமுக, அதிமுக மட்டுமன்றி, புதிதாகத் களம் கண்டுள்ள த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) உள்ளிட்ட எந்தவொரு கட்சிக்கும் விசிகவின் துணை கட்டாயம் தேவைப்படும் ஒரு சூழலே தற்போது நிலவுகிறது என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
தேர்தல் களத்தில் பாமக, மதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் தங்களின் வாக்கு வங்கியைத் தனித்துப் போட்டியிட்டு நிரூபித்த பிறகே கூட்டணிகளில் இணைந்தன என்றும், நாம் தமிழர் கட்சி தனித்து நின்று தன் பலத்தைக் காட்டியுள்ளது என்றும் சுட்டிக்காட்டிய திருமாவளவன், விசிகவின் தனித்துவத்தை விவரித்தார். நாம் இதுவரை தனித்துப் போட்டியிட்டு வாக்கு வங்கியை நிரூபிக்காவிட்டாலும், அனைத்துத் தரப்பு மக்களின் பேராதரவோடும் ஜனநாயக சக்திகளின் வாழ்த்துகளோடும் ஒரு தவிர்க்க முடியாத மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளோம் என்று அவர் தொண்டர்கள் மத்தியில் முழங்கினார்.
கூட்டணிப் பேச்சுவார்த்தைகளின் போது விசிக ஒருபோதும் பதவிகளுக்காகவோ அல்லது இத்தனை இடங்கள் வேண்டும் என்றோ யாரிடமும் பேரம் பேசுவதில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார். விசிக பலவீனமடைந்துவிட்டது போலச் சமூக ஊடகங்களில் திட்டமிட்ட அவதூறுகள் பரப்பப்படுவதாகச் சாடிய அவர், கடந்த தேர்தலில் பிரதான கட்சிகளான திமுக 59 தொகுதிகளாகச் சுருங்கியதையும், அதிமுக 47 இடங்களாகச் சரிந்ததையும், பாஜக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் வாக்குச் சதவீத வீழ்ச்சியையும் புள்ளிவிவரங்களோடு சுட்டிக்காட்டி, விசிக சந்தித்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தார்.
விசிக போட்டியிட்ட இடங்களில் இரண்டு இடங்களில் மட்டுமே வென்றது என ஏளனம் பேசியவர்கள், அந்த இரண்டு இடங்கள் இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் ஆட்சியே அமைக்க முடியாது என்கிற இக்கட்டான அரசியல் சூழலை மக்கள் உருவாக்கிய போதே சிறுத்தைகளின் வலிமையைப் புரிந்து கொண்டார்கள் என்றார். மற்றவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வென்றிருந்தாலும், விசிகவின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி சாத்தியம் என்ற நிலையைத் தமிழக மக்கள் உருவாக்கியுள்ளதாகக் பெருமிதம் தெரிவித்தார்.
இறுதியாக, டெல்லிக்குச் சென்றால் கூட அங்குள்ளவர்கள் தன்னை ‘கிங் மேக்கர்’ என்று போற்றுவதாகக் குறிப்பிட்ட திருமாவளவன், தான் அரசனாகாவிட்டாலும் பிறரை அரசனாக்கும் வலிமை விசிகவிற்கு உண்டு என்றார். “நான்கு சீட்டோ, ஆறு சீட்டோ கொடுத்து எங்களை ஓரங்கட்டிவிடலாம் என நினைத்தால் அது தவறு; விடுதலைச் சிறுத்தைகள் எப்போதும் தமிழக அரசியலின் மையப்புள்ளியாகவே நிற்பார்கள்” என்று கூறிய அவர், தாம் அரசியலில் லாப நஷ்டக் கணக்கு பார்க்காமல் மக்களுக்காகத் தொடர்ந்து தொண்டாற்றுவேன் என நெகிழ்ச்சியுடன் பேசி முடித்தார்.
