ஒரு இடத்தில் நாம் வேலை செய்வதற்குப் பின்னால் குடும்பச் சூழ்நிலை, பணத் தேவை எனப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், எல்லா நேரங்களிலும் நாம் பார்க்கும் வேலை நம் மனதிற்குப் பிடித்தமானதாக அமைந்துவிடுவதில்லை. மனதிற்குப் பிடித்த வேலையும், அதற்கு ஏத்த நல்ல சம்பளமும் ஒருசேர அமைவது என்பது ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கும் வரம். அந்த வகையில், சீனாவைச் சேர்ந்த ஒரு வயதான பெண்மணி, தன்னிடம் கோடிக்கணக்கில் பணம் இருந்தபோதிலும், வெறும் ஆத்ம திருப்திக்காகவும் தன் சொந்த சந்தோஷத்திற்காகவும் வேலைக்குச் சென்று வருவது தற்போது உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
சீனாவில் வசிக்கும் அந்தப் பாட்டி, அங்குள்ள ஒரு உணவகத்தில் பாத்திரம் கழுவும் துப்புரவுப் பணியைச் செய்து வருகிறார். ஆனால், அவர் தினசரி அந்த வேலைக்கு வருவது சாதாரண வாகனத்திலோ அல்லது பொதுப் போக்குவரத்திலோ அல்ல; சுமார் நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள அதிசொகுசு ‘பென்ட்லி’ (Bentley) காரில் தான் வந்து இறங்குகிறார். சொகுசு காரில் வந்து இறங்கி, ஹோட்டலில் பாத்திரங்களை அவர் கழுவும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, தற்போது சீனாவைக் கடந்து உலகம் முழுவதும் காட்டுத்தீயாய் பரவி வைரலாகி வருகிறது.
இதுகுறித்து அந்தப் பெண்மணியிடம் கேட்டபோது, “நான் மிகவும் வசதியான குடும்பப் பின்னணியைக் கொண்டவள் தான். என் வீட்டில் சொத்துக்களுக்கும் பணத்திற்கும் எந்தக் குறையும் இல்லை. ஆனால், எனக்கு வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்கப் பிடிக்கவில்லை. உடல் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் இந்த வேலையைத் தேர்ந்தெடுத்துச் செய்து வருகிறேன்” என்று எளிமையாகக் கூறியுள்ளார். பணமிருந்தும் தலைக்கனம் இல்லாமல், உழைப்பின் மீது அவர் காட்டும் இந்த ஆர்வத்தையும் அவரது அசாத்திய எளிமையையும் நெட்டிசன்களும் சீன மக்களும் சமூக வலைத்தளங்களில் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
